ஐஏஎஸ் அதிகாரியாக நுழைந்து திருமணம்- பணக்கார கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
திருமணத்தின்போது ஐஏஎஸ் அதிகாரி போல் நடித்து, பின்னர் தன் கணவரை மிரட்டியும் அச்சுறுத்தியும் வந்ததாகக் கூறப்படும் பெண் ஒருவரை உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளது.

பரேலியின் ஃபரித்பூர் பகுதியிலுள்ள பச்சோமி கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான அபிஷேக் குமார், தனது மனைவி சாதனா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இரண்டு வாரங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதில் சாதனா, தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும், தனது அதிகாரப்பூர்வ நியமனத்திற்காகக் காத்திருப்பதாகவும் பொய்யாகக் கூறி, போலி ஆவணங்களையும் போலி சமூக ஊடகப் பதிவுகளையும் பயன்படுத்தி தன்னையும் தனது குடும்பத்தினரையும் நம்ப வைத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது.
புகாரின்படி, அபிஷேக்கும் சாதனாவும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சாதனா தான் யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகவும், ஆனால் ஒரு நீதிமன்ற வழக்கு காரணமாக தனது நியமனம் தாமதமாகியுள்ளதாகவும் அபிஷேக்கிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. மேலும், தான் பணியில் சேர்ந்தவுடன், அவருக்கு ஒரு அரசு வேலையைப் பெற்றுத் தருவதாகவும் அவர் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அபிஷேக்கின் குடும்பத்தினர் திருமணத்திற்கு சம்மதித்தனர். இருப்பினும், திருமணம் ஆகி சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சாதனா மோசடி செய்தது அம்பலமானது. இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது தனக்கு பெரிய செல்வாக்கு இருப்பதாகவும், யாரையும் சிறைக்கு அனுப்பிவிட முடியும் என்றும் கூறி, அவள் தன்னை மிரட்டவும் அச்சுறுத்தவும் தொடங்கியதாகவும் அபிஷேக் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு, சாதனா தனது கணவரிடம் 40 லட்சம் ரூபாய் கேட்டதாகவும், தனது கோரிக்கைகளை அவர் நிறைவேற்றாவிட்டால் அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் மேலும் கூறினார்.

