மனைவியை கொன்று புதரில் வீசிய கணவர்! 3 வயது குழந்தையை சடலம் அருகே விட்டு சென்ற கொடூரம்
தெலங்கானாவில் தன் மனைவி தன்னுடன் வசிக்கவில்லை என்றும், மற்றவர்களுடன் நெருங்கி பேசிய வந்ததால் சந்தேகத்தின் பேரில், அவரைக் கொடூரமாகக் கொலை செய்து, புதர்களுக்கு மத்தியில் வீசிய கொடூர கணவர், மூன்று வயது பெண் குழந்தையை சடலத்தின் அருகே விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![]()
தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், ஃபரூக் நகர் மண்டலம், தேவுனிப்பள்ளி கிராம பஞ்சாயத்து, ரங்காரெட்டி கூடா கிராமத்தைச் சேர்ந்த ஷோபரணி (33), 10 ஆண்டுகளுக்கு முன்பு கொய்லகொண்டா கிராமத்தைச் சேர்ந்த ராஜு என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்த பிறகு, சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர்கள் பிரிந்தனர். ஷோபரணி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொய்லகொண்டா கிராமத்தைச் சேர்ந்த பானுகந்தி நரசிம்மா என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் பிறந்த பிறகு, நரசிம்மா குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத்தில் அடிக்கடி சண்டையிட்டதால், ஷோபரணி தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார். இதனால் நரசிம்மலு தன்னுடம் வருமாறு மீண்டும் மீண்டும் அழைத்தும் கேட்கவில்லை. மேலும் வேறு சிலருடன் பேசிக்கொண்டிருக்கிறார் எனச் சந்தேகித்து, ஷோபாவைக் கொல்ல முடிவு செய்தார்.
அதன்படி இந்த மாதம் 21 ஆம் தேதி, நரசிம்மலு ஷோபாவை போனில் பேசி ஷோபாரானி மகன் மகேந்தருக்கு சைக்கில் வாங்கித் தருவதாக கூறி மகபூப்நகருக்கு வரவழைத்தான். மகபூப்நகர் பேருந்து நிலையத்தில் 3 வயது மகளுடன் பைக்கில் ஏற்றிக்கொண்டு, வழியில் மதுபானம் வாங்கினான். மகபூப்நகர், வீரண்ணாபேட்டையில் உள்ள தனது அறைக்கு ஷோபாவை அழைத்துச் சென்ற பிறகு, இருவரும் ஒன்றாக மது அருந்தினர். பின்னர் இருவரும் மகளைப் பற்றி பேசும் போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டபோது, திட்டமிட்டபடி ஷோபாவின் தலையில் கல்லால் அடித்துக் கொன்றான். ஷோபா இறந்துவிட்டதை உறுதிசெய்த பிறகு, அறையில் இருந்த இரத்தக் கறைகளைச் சுத்தம் செய்து பின்னர், ஷோபாவின் உடலை ஒரு பையில் வைத்து அந்தப் பையைத் தனது பைக்கின் பெட்ரோல் டேங்கின் மீது வைத்து, மூன்று வயதுக் குழந்தையை அந்தப் பையின் மீது அமரவைத்து ரங்காரெட்டிக்குக் கொண்டு சென்றான். ஷோபாவின் உடலை கிராமத்திற்கு அருகிலுள்ள விவசாய மரங்கள் நிறைந்த புதர்களில் வீசிவிட்டு, தனது மூன்று வயது மகளை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டான். மறுநாள் காலை புதரின் அருகே இருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற எருகாளி கோவிந்து என்பவர் அங்கு சென்று பார்த்தபோது ஷோபா இறந்தநிலையில் குழந்தை அருகே இருப்பதை கண்டு அவரது தாயார் பொட்டுலா கருணம்மாவுக்குத் தகவல் தெரிவித்தார். ஷோபா கொலை செய்யப்பட்டது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதலில் முதல் கணவர் ராஜு மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் ஷோபா தாயார் பொட்டுலா கருணம்மா நரசிம்ஹுலு மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததால் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொழில்நுட்ப ஆதாரங்களுடன் நரசிம்ஹுலுவை ஐதராபாத், லிங்கம்பள்ளியில் கைது செய்து விசாரித்தனர். இதில் நரசிம்ஹுலு தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டான். இதனையடுத்து அவரை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததாக காவல் உதவி ஆணையர் லட்சுமிநாராயணா தெரிவித்தார்.

