சொத்துக்காக அண்ணனை வெட்டிய தம்பி
வானகரம் பகுதியில் சொத்து தகராறில் சகோதரரையே ஒருவர் வெட்டி கொலை செய்ய முயன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை போரூர் அருகே வசிக்கும் மணிகண்டன் என்பவரும் அவரது சகோதரருமான ராமச்சந்திரன் என்பவரும் வானகரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒன்றாக வந்து மது அருந்தியுள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்கனவே சொத்து தகராறு காரணமாக முன்பகை இருந்துள்ளது. இதனால் ராமச்சந்திரனை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மணிகண்டன் கத்தி ஒன்றை மறைத்து வைத்திருந்து உள்ளார். மது அருந்தி முடித்தவுடன் அருகாமையில் ஆளில்லாத இடத்திற்கு ராமச்சந்திரனை அழைத்துச் சென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் கை துண்டான ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். தகவல் அறிந்து வந்த வானகரம் போலீசார் அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மணிகண்டனை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

