இரவு பிறந்தநாள் கொண்டாட்டம்! போதையில் இருந்த இளைஞர் வெட்டிக் கொலை

 
murder

திருவள்ளூர் அருகே கூலி தொழிலாளி இளைஞர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் அடுத்த மோவூர் பகுதியை சேர்ந்தவர் துரை மகன் சதீஷ் (28).  தாய், தந்தையை இழந்த இவர் மணவாள நகர்  எம்ஜிஆர் நகரில் உள்ள தனது அக்கா வீட்டில் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர், கேஸ் சிலிண்டர் போடுவது, பெயிண்ட் அடிப்பது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று எம்ஜிஆர் நகரில் சதீஷ் அக்கா வீட்டு அருகில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் சதீஷ் மற்றும் அவரது நண்பர் முரளி ஆகியோரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.  பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடர்ந்து  நண்பர்கள் சிலர் மது அருந்தியதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் இன்று அதிகாலை சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் அங்குள்ள ஏரிக்கரை அருகே சதீஷ் உடல் இருப்பதைக் கண்ட பொதுமக்கள் மணவாளநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணவாள நகர் போலீசார் வெட்டு காயங்களுடன் இருந்த முரளி என்பவரை மீட்டு உடனடியாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்த தகவலின் பேரில் திருவள்ளூர் எஸ்பி சீனிவாச பெருமாள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா? இந்த கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்