மதுபோதையில் தாயின் கழுத்தை அறுத்தை கொன்ற மகன்!

 
murder

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே பெற்ற தாயை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த மகன் தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

murder

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே தச்சன்கரை கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி சுசீலா. கணவன் இறந்த நிலையில் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். மதுவுக்கு அடிமையான அவரது மூத்த மகன் விஜயகுமாருக்கு திருமணமாகாத நிலையில், மின்வாரியத்தில் பணியாற்றும் இரண்டாவது மகன் சின்னத்தம்பிக்கு திருமணமாகி ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதனிடையே மது அருந்துவதை நிறுத்த விஜயகுமாருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் இன்று மாலை சுசீலா வீட்டில் தனியாக இருந்த போது அங்கு மதுபோதையில் வந்த விஜயகுமாருக்கும் சுசீலாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சட்டைப்பையில் வைத்திருந்த சிறிய கத்தியால் சுசீலாவின் கழுத்தை விஜயகுமார் அறுத்து விட்டு தானும் கழுத்தை அறுத்து கொண்டார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும்  மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சுசீலா உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் விஜயகுமார் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய சுசீலா முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு விஜயகுமார் உடன்படாததால் பிரச்சனை ஏற்பட்டதில் இந்த கொலை நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.