9ஆம் வகுப்பு சிறுமியை சுட்டுக்கொன்ற 16 வயது காதலன்

 
s

பெங்களூருவில் 9ஆம் வகுப்பு சிறுமியை, அவரது காதலனான 16 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image

பெங்களூருவின் சாத்தனுரில் உள்ள வெங்கடராயதொட்டியைச் சேர்ந்த சிறுமி. 9-ஆம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இவருக்கும், கெம்பலநாதா கிராமத்தைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளியான 16 வயது சிறுவனுக்கும் சமூக வலைதளம் மூலம் காதல் மலர்ந்துள்ளது. சிறுமி, கடந்த சில மாதங்களாக தோழியின் வீட்டில் தங்கியிருப்பதாக தன் பெற்றோரிடம் கூறிவிட்டு, சிறுவனின் வீட்டிற்கு அருகில் அறை எடுத்து தங்கியுள்ளார். ஜூலை 10 ஆம் தேதி, அந்தச் சிறுமி இன்ஸ்டாகிராமில் மற்றொரு சிறுவனுடன் சாட்டிங் செய்து கொண்டிருப்பதை அந்தச் சிறுவன் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், சிறுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவளை தாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, தன் வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியால் சிறுமியின் முகத்தில் சுட்டுள்ளார். இதில் அச்சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இந்த கொலையை மறைப்பதற்காக சிறுவன், தனது அண்ணன் மற்றும் மாமாவுடன் சேர்ந்து, சிறுமியின் உடலை தனது விவசாய நிலத்தில் புதைத்தனர். அந்தத் துப்பாக்கி, குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் தாத்தாவுக்குச் சொந்தமானது என்றும், அது முன்பு வேட்டையாடப் பயன்படுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது. 

சிறுமி காணாமல் போனதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கொலை நடந்து ஒரு வாரம் கழித்து, வெள்ளிக்கிழமை அன்று போலீசார் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீட்டில் நடத்திய விசாரணையில் இக்கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விசாரணைக்கு பின் சிறுவன், கெம்பலநாதா கிராமத்தைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளர்களான அந்தச் சிறுவனின் சகோதரன் புட்டமடா (19) மற்றும் அவனது மாமா ஹரிஷ் (40) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.