வெந்நீரில் மிளகாய்பொடி கலந்து மருமகன் மேல் ஊற்றி கொன்ற மாமியார்! பாலியல் தொல்லையால் நடந்த விபரீதம்

வெந்நீரில் மிளகாய் பொடி கலந்து மருமகன் மேல் ஊற்றி கொலை செய்திருக்கிறார் மாமியார். இதற்கு மனைவியும் உடந்தையாக இருந்திருக்கிறார். மாமியாருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் இந்த கொடூர செயலை செய்திருக்கிறார்கள்.
திருவெறும்பூர் அடுத்த பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தனது மனைவி டயானா மேரி , மாமியார் இன்னாசி அம்மாள் ஆகியோருடன் வசித்து வந்திருக்கிறார் .
செல்வராஜுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்திருக்கிறது. அடிக்கடி மது அருந்திவிட்டு போதையில் வந்து மாமியாரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். மாமியாரும், மனைவியும் இதை கண்டித்து வந்திருக்கிறார்கள்.
எத்தனை முறை கண்டித்து பார்த்தும் திருந்தாமல் மறுபடியும் மது அருந்திவிட்டு போதையில் வந்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதில் மாமியாரும் அவரது மனைவியும் கடும் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் கடந்த ஐந்தாம் தேதி அன்றும் மது போதையில் வீட்டுக்கு வந்த செல்வராஜ், மாமியாருக்கு பாலியல் தொழிலை கொடுத்து இருக்கிறார். அப்போது ஆத்திரமடைந்த டயானா மேரியும் , இன்னாசியம்மாளும் அடுப்பில் வெந்நீர் வைத்து அதில் மிளகாய் பொடியை கொட்டி கலந்து, பின்னர் போதையில் படுத்திருந்த செல்வராஜ் மீது ஊற்றி இருக்கிறார்கள்.
உடல் முழுவதும் வெந்நீர் பட்டு உடல் வெந்து துடிதுடித்திருக்கிறார். செல்வராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் செல்வராஜ். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டயானா மேரியையும் இன்னாசி அம்மாளையும் அழைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதை அடுத்து கொலை வழக்காக பதிவு செய்த திருவெறும்பூர் போலீசார், டயானா மேரி -இன்னாசி அம்மாள் இருவரையும் கைது செய்துள்ளார்கள்.