சிறுமியின் முகத்தில் தலையணையால் அழுத்தி மூச்சு திணறடித்து கொன்ற சித்தி! உடந்தையாக இருந்த தந்தை! சிக்கவைத்த அறிக்கை

 
r

கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த சிறுமியை தலையணையால் முகத்தில் அழுத்தி மூச்சு திணறடித்து துடிதுடிக்க கொடூரமாக கொலை செய்திருக்கிறார் சித்தி.  இந்த கொடூர செயலுக்கு அந்த சிறுமியின் தந்தை உடந்தையாக இருந்திருக்கிறார் . சிறுமி உயிர் இழந்து ஒரு வருடத்திற்கு பின்னர் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையால் சிறுமியின் சித்தியும் தந்தையும் போலீசில் சிக்கி சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார்கள்.

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கரில் வசித்து வந்தவர் சந்திரசேகர்.  இவர் ராணுவ வீரர்.   சுமதி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டில் பெண் குழந்தை பிறந்துள்ளது.    குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் கழித்து உடல் நலக்குறைவு ஏற்பட்டு சுமதி உயிரிழந்திருக்கிறார். இதன் பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் நாட்டை கிராமத்தைச் சேர்ந்த ராதிகா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கிறார் சந்திரசேகர் .  

s

 கடந்த ஆண்டு மே மாதம் சந்திரசேகரின் முதல் மனைவிக்கு பிறந்த அந்த சிறுமி திடீரென்று மயங்கி விட்டதாக சொல்லி சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.   சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.  அதன் பின்னர் ராதிகாவும் சந்திரசேகரும் உறவினர்களுடன் சேர்ந்து சிறுமிக்கு இறுதிச்சடங்கு செய்து விட்டனர்.

 இந்த சிறுமி உயிர் இழந்து ஓராண்டுக்கு பின்னர் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்திருக்கிறது .  இதில் தான் திடுக்கிடும் தகவல் வெளிவந்திருக்கிறது.  சிறுமி தலையணை வைத்து முகத்தை அழுத்தியதால் மூச்சு திணறி உயிரிழந்ததாக கூறப்பட்டிருக்கிறது .  இதன் பின்னர் போலீசார் ராதிகாவையும் சந்திரசேகரனையும் அழைத்து விசாரணை நடத்திய போது,  சிறுமியை துடிதுடிக்க கொலை செய்ததை சித்தி ராதிகா ஒப்புக் கொண்டிருக்கிறார் .இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததையும் சந்திரசேகர் ஒப்புக் கொண்டிருக்கிறார் .  இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.