போதையில் கெத்தாக பேசிய இளைஞரை கொடூரமாக கொன்ற நண்பர்கள்

 
murder

ஆவடி நந்தவனம் மேட்டூர் காந்தி தெரு பகுதியை சேர்ந்த கார்த்தி (21) ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார், அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜோ என்கின்ற காஜாமொய்தீன் (27) கூலி வேலை செய்து வருகிறார். கடந்த மூன்று வருடத்திற்கு முன் கயல் (22) என்கின்ற திருநங்கையை திருமணம் செய்து கொண்டு குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.கடந்த வாரம் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணங்களாக ஜோ என்கின்ற காஜா மொய்தீன் கோபித்துக் கொண்டு ஒரு வார காலமாக ஆவடியில் உள்ள நண்பரான கார்த்திக் என்பவரது வீட்டில் தங்கி வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு இவர் தங்கி இருந்த வீட்டில் 9 நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். போதை தலைக்கு ஏறியவுடன் ஜோ என்கின்ற காஜாமொய்தீன் நண்பர்களுக்குள் நான் எனது வட்டாரத்தில் மிகப்பெரிய ரவுடி நான் நினைத்தால் உங்களை இங்கேயே செய்து விடுவேன் எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 9 நபர்களும் ஜோ என்கின்ற காஜா மொய்தினை கத்தி, பீர் பாட்டில் போன்ற  ஆயுதங்களால் தலை, கை, வயிறு ஆகிய இடத்தில் வெட்டி கொன்று விட்டு தப்பி சென்று விட்டனர். வாடகை வீட்டில் தங்கியிருந்த கார்த்திக் என்பவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆவடி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஆவடி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை கைரேகை நிபுணர்களை வர வழித்து தடயங்களை சேகரித்தனர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தபோது சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (25) பட்டாபிராம் பகுதியை சேர்ந்த, ராஜேஷ் என்கின்ற ராஜசேகரன் ( 25), லலித் (21), லோகேஷ் (25), அஜித் (20), செங்குன்றம் காந்திநகர் பகுதியை சேர்ந்த சாந்தகுமார் (21) , ஆவடி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (20) ஆசிப், அவரது நண்பர் ஆகிய 9 நபர்களும் சேர்ந்து ஜோ என்கின்ற காஜா மொய்தினை கொலை செய்தது தெரியவந்தது. இதில் துரிதமாக காவல்துறை செயல்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கைதான 7 பேரை ஆவடி போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆசிப் மற்றும் அவரது நண்பரை ஆவடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.