மனைவியை அடித்ததால் கணவருக்கு நேர்ந்த கதி

தினம்தோறும் மது போதையில் வந்து மனைவியை அடித்து சித்திரவதை செய்ததை பொறுக்க முடியாத மனைவி போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் போலீசுக்கு பயந்து கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். குமரி மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாராயணன் புதூரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இந்த வாலிபர் தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரின் மனைவி குமாரி , நாகர்கோவிலில் உள்ள ஆவின் பாலகத்தில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
வேன் டிரைவராக பணிபுரிந்து வரும் ஜெகதீசுக்கு மதுப்பழக்கம் அதிகமாக இருந்திருக்கிறது. தினந்தோறும் மது அருந்தி விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்திருக்கிறார் . ஒரு கட்டத்திற்கு மேல் கணவனின் தொல்லையை பொறுக்க முடியாத குமாரி, கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் .
தினமும் மது அருந்தி விட்டு வந்து கணவன் தன்னை அடித்து சித்திரவதை செய்வதாக புகார் சொல்ல, போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள் . அதன் பின்னர் நேற்று வழக்கம்போல் ஆவின் பாலகத்திற்கு வேலைக்கு சென்று இருக்கிறார் குமாரி. ஜெகதீஸ் செல்போனுக்கு தொடர்பு கொண்ட கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார், ‘’உன் மனைவி உன் மீது புகார் கொடுத்திருக்கிறார். அது குறித்து விசாரிக்க வேண்டும். காவல் நிலையத்திற்கு வர வேண்டும்’’ என்று அழைக்க, போலீஸ் விசாரணைக்கு பயந்து வீட்டில் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் ஜெகதீஷ்.
ஆவின் பாலகத்தில் வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய குமாரி, சமையலறையில் கணவன் தூக்கிட்டு சடலமாக தொங்குவதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் . தகவல் அறிந்த தென்தாமரை குளம் போலீசார் ஜெகதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் .
ஜெகதீஷ் தற்கொலை குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தான், போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.