காதல் மனைவியை கொன்று சாக்கடையில் வீசிய இளைஞர்
தன் மனைவியைக் கொலை செய்து, அவரது உடலை மழைநீர் வடிகாலில் வீசியதாகக் கூறப்படும் 22 வயது இளைஞரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.

22 வயதான முகமது இர்ஃபாஜும், 25 வயது ருக்ஸானா, என்பவரும் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். ருக்ஸானாவுக்கு இதற்கு முன்பு திருமணமாகி, ஒரு குழந்தையும் இருந்தது. ஆனால், அவர் தனது முதல் கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்திருந்தார். பீகாரில் பலூன்கள் விற்கும்போது இந்தத் தம்பதியினர் இடையே காதல் ஏற்பட்டு, திருமணமும் செய்துகொண்டனர். சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, இவர்கள் பெங்களூருக்குக் குடிபெயர்ந்தனர். அங்கு இர்ஃபாஜ் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். ருக்ஸானாவும் அங்கு பணிபுரிந்தார். ஆனால் தம்பதியினர் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. ருக்ஸானாவுக்குத் திருமணத்திற்குப் புறம்பான உறவு இருப்பதாக இர்ஃபாஜ் சந்தேகித்தார். அவர் அடிக்கடி தொலைபேசியில் வேறு ஒருவருடன் பேசுவதாகவும் குற்றம் சாட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அக்டோபர் 10 ஆம் தேதி, இந்தச் சண்டை முற்றி, ஒரு கல்லை எடுத்து ருக்ஸானாவின் தலையில் போட்டார் இர்ஃபாஜ். பின்னர் அவர் அப்பெண்ணின் வாயில் ஒரு துணித் துண்டைத் திணித்ததாகக் கூறப்படுகிறது. கொலைக்குப் பிறகு, இர்ஃபாஜ் ருக்ஸானாவின் உடலை ஒரு பைக்குள் வைத்து இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று அங்கு உடலை வீசிவிட்டு திரும்பியதாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 13 அன்று, கோபாலபுரா வடிகால் பகுதியில் பிளாஸ்டிக் உறையில் சுற்றப்பட்டிருந்த உடலை போலீசார் கண்டுபிடித்தனர். பாதிக்கப்பட்டவரின் வாயில் துணி திணிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மாகடி ரோடு போலீசார் 10க்கும் மேற்பட்ட குழுக்களை அமைத்து, காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து, அப்பகுதியில் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, கோபாலபுராவில் வசிக்கும் ஒருவரைத் திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர் காணாமல் போனதாக அப்பகுதி மக்கள் கூறினர். இந்தத் தகவலின் அடிப்படையில், போலீசார் இர்ஃபாஜிடம் விசாரணை நடத்தியபோது, தனது மனைவி பீகாரில் உள்ள தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டதாக கூறியுள்ளார். போலீசாருக்குச் சந்தேகம் ஏற்பட்டதால், அவரிடம் துருவி துருவி விசாரித்தபோது இர்ஃபாஜ் கொலையை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

