"என் பேச்சை கேட்கலனா... உன்னை ஃபெயில் ஆக்குவேன்"- மாணவியை மிரட்டி வன்கொடுமை செய்த ஆசிரியர்

 
s

குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர், 14 வயது மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்கோட்டில் உள்ள அரசு நடத்தும் அன்னை தெரசா பள்ளி எண் 88-இல் கணித ஆசிரியராகப் பணியாற்றி வரும் மோஹித் டேங்க், 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அத்துமீறியுள்ளார். குற்றம் நடந்து சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு, மாணவி தன் தாயிடம் கதறி அழுது, தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்த பின்னரே இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உடனே சிறுமியின் தாய் தாலுகா காவல் நிலையத்தை அணுகிப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 2 ஆம் தேதி மோஹித்தை காவல்துறையினர் கைது செய்தனர். பாலியல் வன்கொடுமை தொடர்பான விதிகள் உட்பட, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO) கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகாரின்படி, அந்த மாணவி 2023 முதல் 2026 வரை மதர் தெரசா பள்ளி எண் 88-ல் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன் பிறகு பர்தன்வாலா கன்யா வித்யாலயாவுக்கு மாறி, தற்போது அங்கு 9 ஆம் வகுப்பில் படித்து வருகிறார். செப்டம்பர் 23 அன்று தனது மகள் வழக்கத்திற்கு மாறாக பதட்டமாகவும், மன உளைச்சலுடனும் காணப்பட்டதை கவனித்ததாக அவரது தாய் கூறினார். இதுகுறித்து மகளிடம் விசாரிக்கையில், டேங்க் சம்பந்தப்பட்ட தனது அனுபவத்தை விவரித்ததாகக் கூறப்படுகிறது. புகாரின்படி, அந்த ஆசிரியர், சிறுமியிடம், ​ “நான் உன்னை கணிதத்தில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வைப்பேன், எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும். நான் சொன்னத்தை கேட்காவிட்டால் கணிதத்தில் தோல்வியடையச் செய்வேன்” மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ஜனவரி 9, 2026 அன்று அந்த மாணவி காலை சுமார் 7.15 மணியளவில் பள்ளிக்கு வந்தபோது, ​​அலுவலகத்தில் இருந்த மோஹித், அவளை அழைத்து, "நாம் வீட்டிற்குச் செல்ல வேண்டும்" என்று கூறியதாகக் கூறப்படுகிறது. அவள் மறுத்து படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கியபோது, ​​அந்த ஆசிரியர் அவளைப் பின்தொடர்ந்து சென்று,  "நீ என் பேச்சைக் கேட்கவில்லை என்றால், நான் உன்னைக் கணிதத்தில் ஃபெயில் ஆக்குவேன்... ஒரு பிளேடால் என்னை நானே வெட்டிக்கொள்வேன்" என எச்சரித்துள்ளார். மேலும் மாணவியின் பள்ளிப் பையைப் பறித்து, அவளை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. சக மாணவர்களிடம் புத்தகத்தை வீட்டில் மறந்துவைத்துவிட்டு வந்துவிட்டேன், வீட்டிற்கு சென்று எடுத்து வருகிறேன் என சொல்லிவிட்டு வருமாறு அறிவுறுத்தியுள்ளார். பயந்துபோன அந்த மாணவியை ஆசிரியர்  தனது காரில் ஏற்றி அவரது தனிமையான அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்றதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் படுக்கையறைக்குள் அந்த மாணவியை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் காலை சுமார் 8.30 மணியளவில் பள்ளியிலிருந்து சிறிது தூரத்தில் அவளை இறக்கிவிட்டதாகவும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அடிக்கடி, அந்த மாணவியை காலியான வகுப்பறைகளுக்கு வரவழைத்து, பலமுறை அவளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.