’என் பொண்டாட்டிய கூட்டிட்டு ஓடிட்டான்’- நடுரோட்டில் வெட்டப்பட்ட டீ மாஸ்டர்

தியாகதுருகம் அருகே அடுத்தவர் மனைவியை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்த டீ மாஸ்டரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்திய ஓசூரை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த சித்ரையன் என்பவர் கடந்த சில வருடங்களாக ஓசூரில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். சித்ரையன் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது அந்தப் பகுதியில் உள்ள திருமணம் ஆன செல்வி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. நீண்ட நாட்களாக முறையற்ற உறவில் இருந்த இருவரும் ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்று சேர்ந்து வாழ முடிவெடுத்து செல்வி தனது கணவர் தரணீஷை பிரிந்து வந்து சித்ரையனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் தனது குடும்பத்தினருக்கோ, கணவர் குடும்பத்தினருக்கோ தெரிந்துவிட்டால் ஆபத்து நேரிடும் என்று அஞ்சியதால் சித்ரையன் செல்வியை அழைத்துக் கொண்டு தனது சொந்த ஊரான வீரசோழபுரத்திற்கு கடந்த ஆண்டு வந்துள்ளார். சொந்த ஊரில் இருந்தாலும் செல்வியின் கணவருக்கு தெரிந்து விடும் என்ற அச்சத்தில் சித்ராயன் வீரசோழபுரத்திற்கு அருகே உள்ள வி.பாளையம் என்ற கிராமத்தில் தங்கி குடும்பம் நடத்தி வந்ததோடு மாடூர் சுங்கச்சாவடி அருகே உள்ள தேநீர் கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் செல்வி ஓசூரில் உள்ள தனது குடும்பத்தினரை பார்த்து விட்டு வருவதாக கூறி ஓசூர் சென்று பொழுது செல்வியை நேரில் பார்த்த முதல் கணவர் தரணீஷ் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதோடு ஆத்திரம் அடைந்துள்ளதாக தெரிகிறது.
செல்வியை நோட்டமிட்டவாறு இருந்த தரணீஷ் செல்வி தனது இரண்டாவது கணவருடன் வசிக்கும் வி.பாளையம் சென்றதும். தனது உறவினர் மூலம் செல்வி வசிக்கும் ஊரை அறிந்து கொண்ட தரணிஷ் கடந்த மாதம் 31ஆம் தேதி அன்று தனது உறவினர்களான ரஞ்சித் ,வெங்கடசாமி,மதன்குமார் ஆகிய மூன்று சேர்ந்து காரில் வந்து சித்ராயன் வேலை பார்க்கும் தேநீர் கடையை நோட்டமிட்டு அவர் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது வழிமறித்து தகராறில் ஈடுபட்டிருந்த பொழுதே எதிர்பாராத விதமாக தரணிஷ் தனது காலில் வைத்திருந்த அரிவாளை எடுத்து தலையிலும் உடலிலும் சரமாரியாக வெட்டி நான்கு பேரும் கொலைவெறி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதனை அடுத்து தியாகதுருகம் உதவி ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையில் தனிப்படை அமைத்து ஓசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் குற்றவாளிகள் நெய்வேலியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து நெய்வேலிக்கு விரைந்து சென்ற போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற அவர்களை விரட்டி சென்று பிடித்த பொழுது தரணிஷ் கால் தவறி கீழே விழுந்ததால் பலத்த காயம் ஏற்பட்டதோடு கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.இதனை அடுத்து போலீசார் நான்கு பேரையும் கைது செய்து சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தரணிஷ் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது மனைவியை நேரில் பார்த்ததால் மிகவும் ஆத்திரமடைந்ததாகவும் அதனால் தனது உறவினர்களுடன் வந்து கொலை செய்ய திட்டமிட்டு வந்து அரிவாளால் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும், குற்றத்தை ஒப்புக் கொண்டார். கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவர் சிறார் என்பதால் அந்த சிறாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சீர்திருத்த பள்ளிக்கும், தரணிஷ்,ரஞ்சித் குமார்,வெங்கடசாமி ஆகிய மூவரையும் போலீசார் சிறைக்கும் அனுப்பி வைத்தனர்.