அதிமுக கவுன்சிலர் மகன் கல்லால் அடித்துக் கொலை

 
murder

மன்னார்குடியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் மகன் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காகித பட்டறை தெருவை சேர்ந்தவர் வார்டு செயலாளர் பார்த்திபன். இவரது மனைவி சத்யா. பார்த்திபன் அதிமுக முன்னாள் கவுன்சிலர், இவர்களது மகன் ஜெய நாராயணன் (38) எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி நந்தினி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஜெய நாராயணன் 4 பேருடன்  இரவு மது அருந்திவிட்டு காகிதபட்டறை தெருவில் நடந்து சென்ற போது,  இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி தலையில் பெரிய கல்லை தூக்கி போட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது ஜெயநாராயணன் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெய நாராயணன் உயிரிழந்தார். இது குறித்து மன்னார்குடி போலீஸ் வழக்கு பதிவு செய்து, மன்னார்குடி டிஎஸ்பி அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் காகிதபட்டறை தெருவை சேர்ந்த  3 நபர்களை பிடித்து இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொலை முன்விரோத காரணமாக நடந்திருக்கலாமா  என்ற  கோணத்தில்  போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்  

மது போதையில் ஏற்பட்ட தகராறில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் மகன் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.