மதுபோதையில் தாயை அடித்து கொன்ற மகன்! தந்தை உயிருக்கு போராட்டம்
அரகண்டநல்லூர் அருகே சொத்து தகராறில் மது போதையில் தாய் தந்தையை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது பரனூர் கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் விஜயலட்சுமி - கனகராஜ் தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் பிரதாப் என்பவர் பாண்டிச்சேரியில் வேலை செய்து வருகிறார். இரண்டாவது மகனான பிரகாஷ் திருமணம் ஆகி வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு குடிபோதையில் இருந்த பிரகாஷ், தாய் தந்தையை தனக்கு அதிகமாக சொத்து தரவில்லை எனக்கூறி மது போதையில் தகராறு ஈடுபட்டுள்ளார். அப்போது கை மற்றும் கல்லால் தனது தாய் தந்தையை தாக்கியுள்ளார். இதில் இருவரும் காயம் அடைந்து முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சையில் இருந்த பிரகாஷின் தாயார் விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த, அரகண்டநல்லூர் போலீசார் பிரகாஷை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் சொத்து தகராறில் மது போதையில் தாய் தந்தையை தாக்கிய போது பலத்த காயம் அடைந்த தாய் விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பிரகாஷை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சொத்து தகராறில் மகனே தாய் தந்தையை தாக்கியதில் தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


