தந்தையை கொலை செய்து அவருடன் படுத்து தூங்கிய மகன்!

 
murder

வாணியம்பாடி அருகே தந்தையை கத்தியால் தலையில் வெட்டி கொலை செய்து அவருடன் படுத்து தூங்கிய மகன் கைது செய்யப்பட்டார்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரியபேட்டை ஐய்யாசாமி தெரு பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 78). இவருக்கு திருமணம் ஆகி ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மனைவி கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் லோகநாதன் மற்றும் அவரது மகன் ஹரிஷ் குமார் (வயது 35) இருவரும் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஹரிஷ் குமார் கடந்த 10 வருடங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தந்தை மகனுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் மகனிடம் தந்தை லோகநாதன் தகராறு ஏற்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் லோகநாதன் மகன் ஹரிஷ் குமார் வீட்டில் கட்டிலில் இருந்த தந்தையை கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் லோகநாதன் உயிரிழந்து உள்ளார். அதன் பிறகு மகன் ஹரிஷ் குமார் அதன் அருகிலேயே உறங்கி உள்ளார். பின்னர் விடியற்காலை அப்பா இறந்து விட்டதாக தங்கையின் கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் அருகில் இருந்தவருக்கு அவர் போன் செய்து விசாரிக்க சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் லோகநாதன் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து நகர காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த ஹரிஷ் குமாரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாணியம்பாடி அருகே தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் மகன் தந்தையை தீயால் வெட்டி கொலை செய்த சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.