கீழே விழுந்ததில் மயக்கமடைந்த தந்தை இறந்துவிட்டதாக எண்ணி தீவைத்த மகன்! சென்னையில் பரபரப்பு

சென்னை தண்டையார்பேட்டையில் தந்தைக்கும் மகனுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மகன் தந்தையை தள்ளி விட்டதால் கீழே விழுந்து தலையில் அடிபட்டு மயக்கம் ஏற்பட்ட தந்தையை இறந்துவிட்டதாக எண்ணி தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை YMCA குப்பம் 3 வது தெருவைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (50). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த சனிக்கிழமை அன்று மாலை உடல் எரிந்த நிலையில் சடலமாக இருப்பதாக வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய மனைவி மகா காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சத்தியமூர்த்தி எரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் தந்தை சத்தியமூர்த்தி, மகன் தனுஷ்கோடியை திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த தனுஷ்கோடி, தந்தை சத்தியமூர்த்தியை கீழே தள்ளியுள்ளார்.இதில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. ஆனால் மயக்க நிலையில் இருந்த தந்தை உயிரிழந்து விட்டதாக நினைத்து வீட்டில் இருந்த போர்வை மற்றும் கால் மிதியடியை மேலே போட்டு தந்தையின் உடலில் தீ வைத்து எரித்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து மகன் தனுஷ்கோடியை காசிமேடு போலீசார் கைது செய்தனர்.