கழுத்தை அறுத்து மூதாட்டி படுகொலை! செங்கல்பட்டில் பரபரப்பு
கல்பாக்கம் அருகே கழுத்தை அறுத்து மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த பம்மராஜபுரம் பெரியபாளையத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது 70). இவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் இட்லிக்கடை நடத்தி வருகிறார். இவரது கணவர் கண்ணன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கடைநிலை ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்று, அண்மையில் இறந்து விட்டார்.
இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இரவு 8 மணிவரை வீட்டில் விளக்கு போடாமல் கதவு வெளியே தாப்பாள் போடப்பட்டு இருந்தது. அருகாமையில் வசிக்க கூடியவர் வீட்டை திறந்து பார்த்த போது சமையலரையில் கழுத்து அறுந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கன்னியம்மாள் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்த பக்கத்து வீட்டார் சதுரங்கப்பட்டினம் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் பின்னர் பிணத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்திற்கு வந்த செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி சாய் பிரணீத், மாமல்லபுரம் டி.எஸ்.பி ரவி அபிராம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். எஸ்.பி உத்தரவின்படி போலீசார் இருட்டாக இருந்த அந்த பகுதிகளில் விளக்கு ஒளி ஏற்படுத்தி கொலையாளிகள் குறித்து தடயங்களை சேகரித்தனர்.
கொலை நடந்த பகுதி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள சி.சி.டீ.வி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். காஞ்சிபுரத்திலிருந்து இருந்து மோப்பநாய் டைகர் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தனியாக வசித்து வந்த கன்னியம்மாளை நோட்டமிட்டு கழுத்தை அறுத்து கொலை செய்த கொலையாளி யார்? எதற்காக கொலை நடந்தது? தனி நபர் கொலை செய்தாரா? ஏதேனும் கொள்ளை கும்பலா? காரணமாக கொலை செய்திருப்பாரா? அல்லது இவரது கடைக்கு இட்லி உடன் சிக்கன் குழம்பு சாப்பிட வரும் போதை ஆசாமிகள் கொலை செய்து இருப்பார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் 3 தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வருகின்றனர். கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட கன்னியம்மாள் அணிந்திருந்த மூக்குத்தி இரண்டு கம்பல் காணாமல் போயிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.