மகளை காதலித்த இளைஞரை கொடூரமாக கொலை செய்த தந்தை

 
murder

சிவகாசியில் மகளை காதலித்த இளைஞர்  கொலை செய்யப்பட்ட வழக்கில், தந்தையுடன் அவரது சிறைச்சாலை நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.


சிவகாசி அருகே செவலூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் பிரபாகரன் (வயது 24). டிரைவர் வேலை செய்து வந்தார். இவர் செவலுாரிலிருந்து கொத்தனேரி செல்லும் வழியி லுள்ள கண்மாயின்  கிணற்றில் காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலறிந்த எம்.புதுப்பட்டி போலீசார் சிவகாசி தீயணைப்புத் துறையினரின் உதவியோடு பிரபாகரனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக  விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். போலீசார்கள் நடத்திய முதல் கட்ட  விசாரணையில் செவலுாரைச் சேர்ந்த சுரேஷ் ( வயது40) மற்றும் அவரது நண்பர் மதுரை விளாங்குடியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற விக்கி( வயது 36) ஆகிய இருவரும் சேர்ந்து வாலிபர் பிரபாகரனை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்து கிணற்றில் வீசியது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து  இருவரையும் கைது செய்த போலீசார் நடத்திய மேல் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது, கைதான சுரேஷின் 17 வயது மகளை( சங்கரேஸ்வரி) இவர்களது உறவினரான சகோதர உறவு கொண்ட வாலிபர்  பிரபாகரன்  காதலித்து வந்ததாகவும், இதனை சுரேஷின் மகன் சங்கர பாண்டியன் வாலிபர்  பிரபாகரனை கண்டித்துள்ளார். ஆனாலும் தனது மகளைப் பிரபாகரன் காதலித்து வந்ததை  சகித்துக் கொள்ள முடியாத சுரேஷ் பிரபாகரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். 

ஏற்கனவே கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது (சுரேஷின்) மகளை அவரின் சகோதரர் உறவு முறையான புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் என்பவரது மகன் தமிழரசன்  காதலித்து வந்ததால் ஆத்திரமடைந்த சுரேஷ் அவரது மகன் சங்கரபாண்டியன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆறு பேர்கள்  தமிழரசனை கொலை செய்தனர். இந்தக் கொலை வழக்கில்  ஜாமீனில் வெளி வந்த சுரேஷ்  மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட் டிருந்தபோது அங்கு பழக்கமான சிறைவாசி நண்பரான மதுரை விளாங்குடியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற விக்கியை தனது சொந்த ஊரான செவலூருக்கு வரவழைத்துள்ளார். அவருடன் சேர்ந்து பிரபாகரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து கிராமத்தின் காட்டுப்பகுதிக்கு பிரபாகரனை சமாதானப் பேச்சு வார்த்தை நடத்த அழைத்துள்ளார். அங்கு வைத்து மூவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது பிரபாகரனிடம் தனது மகள் பின்னால் சுற்றுவதை நிறுத்திக் கொள்ளுமாறு சுரேஷ் கண்டித்துள்ளார். அப்போது பிரபாகரன் மறுத்ததால் ஆத்திரமடைந்த சுரேஷ் மற்றும் சிறைச்சாலை நண்பர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் சேர்ந்து பிரபாகரனை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அருகி லிருந்த கிணற்றி னுள் வீசி விட்டுத் தப்பிச் சென்றது போலீசாரின்  விசாரணையில் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது. ஏற்கனவே கடந்த வருடம் தனது மகளை காதலித்த சகோதரர் முறை கொண்ட உறவுக்கார இளைஞர் தமிழரசனை கொலை செய்துவிட்டு சிறை சென்று ஜாமினில் வெளிவந்த சுரேஷ், தனது மகளை காதலிப்பதாக அவர் பின்னால் சுற்றிய  மற்றொரு உறவுக்கார, சகோதர உறவு முறை கொண்ட வாலிபர் பிரபாகரனையும்   தனது சிறைவாச நண்பருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் செவலூர் மற்றும் புதுக்கோட்டை கிராமப்புறப் பகுதிகளின் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.