பள்ளிச் சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல்! சென்னையில் அதிர்ச்சி
சென்னையில் பள்ளிச் சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னை தியாகராய நகர் சவுத் போக் சாலையை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி, நந்தனத்தில் உள்ள தனது சித்தப்பா வீட்டுக்கு சென்று விளையாடிவிட்டு தனது வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது நந்தனத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நீலகண்டன் (வயது 25), வலுக்கட்டாயமாக சிறுமியின் கையைப் பிடித்து தனது வீட்டுக்குள் இழுத்துச் சென்று காதலிப்பதாக கூறியதுடன், பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி சிறுமியை பாலியல் துன்புறுத்தலும் செய்துள்ளார்.
சிறுமி அழவே நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உனக்குத்தான் அசிங்கம்.. எனச் சொல்லி சிறுமியை மிரட்டி, வெளியே அனுப்பியுள்ளார். நடந்த சம்பவம் தொடர்பாக சிறுமி தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் தேனாம்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஆட்டோ டிரைவர் நீலகண்டன் மீது போக்சோ சட்டப்பிரிவும் BNS-87 ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்வதற்காக கவர்ந்து செல்வது, ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து தலை மறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.


