விசிக நிர்வாகி கொலையில் திடீர் திருப்பம்- மனைவியே கடப்பாரையால் அடித்துக் கொன்றது அம்பலம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விசிக மேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த வழக்கில் திடீர் திருப்பமாக அவரது மனைவியே அவரை கடப்பாரையால் அடித்துக் கொன்றது உறுதியானது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள உதயசூரிய புரத்தைச் சேர்ந்தவர் விசிக மேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சண்முகநாதன்(53). இவர் ஆம்னி பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி(40) என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். அவரது மகன் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் 16ம் தேதி மாலை சண்முகநாதன் அவரது வீட்டிற்குள் தலையில் ரத்த காயத்துடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக அவரது உறவினர்கள் பனையப்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பனையப்பட்டி காவல்துறையினர் மற்றும் பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் உயிரிழந்த சண்முகநாதன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி தனலட்சுமியை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகு இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்று முடிவு செய்யப்படும் என பனையப்பட்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் தான் உடற்கூறு ஆய்வு முடிவில் சண்முகநாதன் கொலை செய்யப்பட்டது உறுதியானதால் போலீசார் சண்முக நாதனின் மனைவி தனலட்சுமியிடம் விசாரணையை தீவிர படுத்தினர். அந்த விசாரணையில் சண்முகநாதனின் மனைவி தனலட்சுமியே கணவனை கடப்பாரையால் அடித்து கொன்று விட்டு நாடகமாடியது தெரியவந்துள்ளது. மேலும் தனலட்சுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரது கணவர் சண்முகநாதன் தொடர்ந்து அவரது மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டும் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாலும் ஆத்திரமடைந்து அவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து தனலட்சுமியை பனையப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


