இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை! புதுக்கோட்டையில் பயங்கரம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இளைஞர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவரது மகன் ரஞ்சித் (23). இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் பாத்தம்பட்டி என்னுமிடத்திலிருந்து ஆலங்குடி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவரை ஆலங்குடியில் இருந்து மறமடக்கி செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபான கடை அருகே வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல் அறிவாளால் அவரை கொடூரமாக வெட்டி உள்ளது.அவர்களிடமிருந்து தப்பி ஓட ரஞ்சித் முயன்ற போது அவரை விரட்டி விரட்டி அந்த கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளது.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு தப்பி ஓடிய அந்த கும்பலை தேடி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் பிரச்சனை தொடர்பாக இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கொலை செய்யப்பட்ட ரஞ்சித்தின் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் ஆலங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


