சொத்து பிரச்னை- அண்ணனை அடித்து கொன்ற தம்பி
மணப்பாறை அருகே சொத்து பிரச்சனையில் அண்ணனை இரும்பு பைப்பினால் தாக்கி கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மட்டப்பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் அரசன் (வயது 70), இவரது தம்பி பழனியாண்டி (வயது 65). மாடு வியாபாரம் செய்து வரும் அரசனின் மகன் ராஜா சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனால் அவர் தனது மனைவியுடன் சென்னையில் வசித்து வருவதால் மட்டப்பாறைபட்டியில் அரசனும் அவரது மனைவி காளியம்மாள் வசித்து வருகின்றனர். அரசனின் வீட்டிலிருந்து சிறிது தொலைவில் அவரது தம்பி பழனியாண்டிக்கு குடும்பம் இல்லாத நிலையில் குடிசை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
அண்ணன் தம்பி இருவருக்கும் பூர்வீக சொத்து சுமார் 10 ஏக்கர் நிலம் இருப்பதாகவும் அந்த நிலத்தை பிரிப்பதில் இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் தம்பி பழனியாண்டி இரும்பு பைப்பினால் தாக்கியதில், அரசனுக்கு நெற்றி மற்றும் தலையின் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியாண்டியை கைது செய்தனர். சொத்து பிரச்சினையில் அண்ணனை தம்பி இரும்பு குழாயால் அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

