உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டித்து கொலை! சிதம்பரத்தில் பரபரப்பு

 
உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டித்து கொலை! சிதம்பரத்தில் பரபரப்பு

சிதம்பரம் அருகே தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட அருண்பாண்டியன்


சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைநகர் சிவன் கோயில் கீழவீதி பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகன் ஆறுமுகம் என்கிற அருண்பாண்டியன்(28). இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு இவர் வீட்டிலிருந்து வெளியே சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் வீடு திரும்பவில்லை. 

இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திடல்வெளி என்ற இடத்தில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவரது உடல் கிடந்த இடத்தின் அருகே சிறிது தூரத்தில் தலை கிடந்ததாக தெரிகிறது. இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்பனா மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு விசாரணை நடத்திய போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த அருண்பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Physical Education Teacher murder in chidambaram tvk

இதைத்தொடர்ந்து கடலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய்கள் கூப்பர் மற்றும் வெற்றி ஆகியவை வரவழைக்கப்பட்டது. கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்து போலீஸ் மோப்பநாய் கூப்பர் சிறிது தூரம் ஓடி ஒரு வீட்டின் முன்பாக நின்றது. அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மற்றொரு மோப்ப நாய் வெற்றி, அருண்பாண்டியன் உடல் கிடந்த இடத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடி கொலை செய்யப்பட்ட அருண்பாண்டியன்  வீட்டின் முன்பாக நின்றது. இந்த சம்பவம் குறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.