எங்க அப்பா எங்களிடம் தவறாக நடக்கிறார்- ஆசிரியர்களிடம் சகோதரிகள் கண்ணீர்

பள்ளியில் நடந்த விழிப்பினர்வு நிகழ்ச்சியின் போது தான் தங்களின் அப்பா தங்களிடம் தவறாக நடந்து வருகிறார் என்பதை உணர்ந்து ஆசிரியர்களிடம் அது குறித்துச் சொல்லி அழுது இருக்கிறார்கள் சகோதரிகள். இதை எடுத்து ஆட்சியர், சமூக பாதுகாப்பு நலத்துறைக்கு புகார் சென்று அதன் மூலம் காவல்துறைக்கு புகார் சென்று சம்பந்தப்பட்ட அந்த மாணவிகளின் தந்தை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன். 42 வயதான இந்த வாலிபர் கட்டிட மேஸ்திரி ஆக இருந்து வருகிறார். திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகி இருக்கும் இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். மூத்த மகள் ஒன்பதாம் வகுப்பும் இளைய மகள் எட்டாம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
பார்த்திபன் தனது இரண்டு மகள்களிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்திருக்கிறார் . தந்தை தங்களிடம் தவறாக நடக்கிறார் என்பதை அவர்கள் உணராமல் இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில் தான் அரசு பள்ளியில் மாவட்ட சமூக பாதுகாப்பு நலத்துறையின் சார்பில் பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அப்போதுதான் தங்கள் தந்தை தங்களிடம் தவறாக நடக்கிறார் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.
இதை அடுத்து சகோதரிகள் இருவரும் ஆசிரியர்களிடம் சென்று தங்கள் தந்தை தங்களிடம் தவறாக நடப்பதை சொல்லி இருக்கிறார்கள். இதைக் கேட்டு அதிர்ந்த ஆசிரியர்கள் , மாவட்ட ஆட்சியர் வளர்மதி இடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆட்சியரின் மூலமாக மாவட்ட சமூக பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். மாணவிகள் சொன்னது உண்மை என்பது தெரிய வந்திருக்கிறது. இதன் பின்னர் அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் புகார் அளித்துள்ளனர்.
மாணவிகளின் தாய் தனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது என்று முதலில் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் விசாரணை நடத்திய போது தான், குடிபோதையில் தன்னை அடிக்கடி கணவர் கொடுமைப்படுத்தி வருகிறார். நடப்பதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினர். இதற்கு பயந்து தான் நீங்கள் கேட்ட போது வாய் திறக்க முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.
போலீசார் பார்த்திபனை அழைத்து விசாரணை நடத்தி, போக்ஸோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்துள்ளனர்.