சர்க்கரை நோய்க்கு மாத்திரை தின்பதை சொல்லி காட்டியதால் ஆத்திரம்- மூதாட்டியை அடித்து கொன்ற முதியவர்

 
murder murder

சின்னசேலம் அருகே  70 வயது மூதாட்டியை தலையில் அடித்து கொலை செய்த 60 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

murder

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மரவாநத்தம் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ராஜேந்திரன் (வயது 60) மற்றும் அவருடைய மனைவி வள்ளி (வயது 55). இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கன்னியம்மாள் (வயது 70) என்கிற மூதாட்டியும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் ராஜேந்திரன் மனைவி வள்ளிக்கும் கன்னியம்மாளுக்கும் அடிக்கடி வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கன்னியம்மாள் தினந்தோறும் வள்ளியை பார்க்க அவர் வீட்டுக்கு செல்வதும் சிறிது நேரம் அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பதும் வாடிக்கையாக இருந்துள்ளது. 

அப்போது வள்ளியின் கணவர் ராஜேந்திரன் சர்க்கரை ,ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இருப்பதால் அவர் தொடர்ச்சியாக மாத்திரை உட்கொள்வது வழக்கம். அதனை கண்டு எப்போதும் கன்னியம்மாள், ‘உன்னால தான் வள்ளி எப்பவும் கஷ்டப்படுறா’ என வசை பாடுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில்  வழக்கம் போல் கன்னியம்மாள் ராஜேந்திரன் வீட்டிற்கு வந்தபோது ராஜேந்திரன் மாத்திரை உட்கொண்டார். இதனைக் கண்ட கன்னியம்மாள் வழக்கம் போலவே, ‘எப்போ பாத்தாலும் எதுக்கு இவ்வளவு மாத்திரை சாப்பிடுற இதெல்லாம் விட்டுட்டு செத்து தொலையேன்’ எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், ‘என்னையா சாக சொல்ற’ என தனக்கு அருகில் இருந்த அடுப்பு ஊத பயன்படுத்தப்படும் ஊதாங்குழல்  இரும்பு பைப்பை கொண்டு கன்னியம்மாளின் தலையில் நான்கு முறை அடித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கண்ணியம்மாள் ரத்த வெள்ளத்துடன் கிடந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கே கன்னியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு ராஜேந்திரன் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.