பொதுமக்கள் தர்ம அடி- வட மாநில இளைஞர் உயிரிழப்பு
ஈரோட்டில், வீட்டில் தனியாக இருந்த முதிய தம்பதியினரை தாக்கிய வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து மயங்கிய நிலையில் போலீசில் ஒப்படைத்தனர். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சுப்பிரமணியம்- ஜெயலட்சுமி தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற நடத்துனரான சுப்பிரமணியன் வீட்டிற்கு இன்று பிற்பகலில், வந்த வட மாநில இளைஞர் ஒருவர் கதவை தட்டி உள்ளார். முதிய தம்பதியினர் கதவை திறந்த போது வேகமாக வீட்டிற்குள் புகுந்த அந்த இளைஞர் இருவரையும் தாக்கியதுடன், கத்தியால் சுப்பிரமணியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனால் இருவரும் கூச்சலிட்டதையடுத்து அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர், இளைஞரை தடுத்து மடக்கி பிடித்தனர். தொடர்ந்து முரண்டு பிடித்த இளைஞரை பொதுமக்கள் சரமாறியாக தாக்கினர். இதனால் அந்த இளைஞர் மயங்கி விழுந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வட மாநில இளைஞரை மீட்டு சிகுச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இளைஞரின் தாக்குதலில் காயமடைந்த முதியவர் சுப்பிரமணி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுயநினைவின்றி சேர்க்கப்பட்ட வட மாநில இளைஞருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார். விசாரணையில் அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த ராபி ஓரான் என்பது தெரியவந்தது. அவர் எதற்காக ஈரோடு வந்தார், கொள்ளையடிப்பதற்காக முதியவரின் வீடு புகுந்து தாக்கினாரா.? ராபி ஓரான் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்து ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு புகுந்து முதிய தம்பதியினரை தாக்கிய வடமாநில இளைஞர் பொதுமக்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..


