தந்தையை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற மகள்!

 
ச்

மகாராஷ்டிராவின் நாக்பூரில் தந்தையை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிராவின் நாக்பூரில் மதுபோதையில் இருந்த தந்தை, தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றதாகவும், அதனை எதிர்த்தபோது கொடூரமாக தந்தை தன்னை தாக்கியதாகவும் 17 வயது மகள் பரபரப்பு புகார் கூறியுள்ளார். தற்காப்புக்காக, வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து, தனது 45 வயது தந்தையின் தலையில் அடித்ததாகவும், இதில் பலத்த காயங்கள் ஏற்பட்டதை அடுத்து தந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார் என்றும் அந்த சிறுமி கூறியுள்ளார். சம்பவத்திற்கு பின்னர், அந்தச் சிறுமியே 112 என்ற எண்ணிற்கு அழைத்து, தனது தந்தையை கொலை செய்தது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் நாக்பூரின் எம்.ஐ.டி.சி காவல் நிலையப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர் 12-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி ஆவார். உயிரிழந்தவர் 45 வயதான ஜெய்பால் பரேலால் கோல்பிதானே என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஜெய்பாலுக்கு மதுப்பழக்கம் இருந்ததுடன், அவரது குடும்பத்தில் அடிக்கடி தகராறுகளும் ஏற்பட்டு வந்தன. சம்பவம் நடந்த அன்று இரவு, ஜெய்பால் மதுபோதையில் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. மதுபோதையில், அவர் தனது மகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மகள் இதை எதிர்த்ததால், இருவருக்கும் இடையிலான தகராறு முற்றியது. அப்போது, ​​வீட்டில் இருந்த மர மட்டையால் மகள் தனது தந்தையின் தலையில் அடித்துள்ளார். இறந்தவரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், எம்.ஐ.டி.சி போலீசார் இந்திய தண்டனைச் சட்டத்தின் 103-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்தச் சிறுமி காவலில் எடுக்கப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. அந்தச் சிறுமி அமராவதியில் உள்ள சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.