சவப்பெட்டிகளுடன் ஆளுநர் மாளிகை முன்பு திரளப்போகும் மமக

சவப்பெட்டிகளுடன் ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது மனிதநேய மக்கள் கட்சி. வரும் 17ஆம் தேதி இந்த ஆர்ப்பாட்டம் நடத்த அக்கட்சி முடிவு செய்து அறிவித்திருக்கிறது.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை, இணையதள விளையாட்டுகள் முறைப்படுத்தும் சட்ட மசோதாவை தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்துள்ளார். சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு நான்கு மாதங்கள் கழித்து அந்த மசோதாவை திருப்பி அனுப்பி இருக்கிறார் ஆளுநர். இது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறது மனிதநேய மக்கள் கட்சி.
இது குறித்து கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆன்லைன் ரம்மி, இணைய சூதாட்டத்தால் ஏற்படுகின்ற உயிர்ப் பலியினை தடுக்க தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு தலைமையில் குழு அமைத்து அக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தயாரிக்கப்பட்டது.
அந்த மசோதாவை கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றியது. தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக அரசு நிறைவேற்றிய இந்த சட்டத்தில் சந்தேகங்கள் இருப்பதாக ஆளுநர் கூறியிருக்கும் நிலையில் தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி ஆளுநரை சந்தித்து விளக்கம் அளித்து இருந்தார்.
அப்படி இருந்தும் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவினை 142 நாட்கள் கிடப்பில் போட்டிருந்தார் ஆளுநர். இதுவரைக்கும் ஆன்லைன் ரம்மியால் 47 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இந்த நிலையில் ஆளுநர் அந்த சட்ட மசோதாவை திருப்பி அனுப்பி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது மட்டுமல்லாது தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி இருக்கும் 20க்கும் மேற்பட்ட சட்டமுன் வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது தமிழக மக்களை அவமதிக்கின்ற செயல். அதனால் ஆளுநரின் இந்த எதேச்சதிகார செயலை கண்டித்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட கிடப்பில் இருக்கும் அனைத்து சட்ட முன் வடிவுகளுக்கும் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கோரி வரும் 17ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு சவப்பெட்டிகளுடன் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.