மனைவிடம் காதலிப்பதாக கூறி தொல்லை- புலம்பெயர் தொழிலாளி அடித்துக் கொலை

 
murder

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மீனாட்சிபுரம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. 

murder

இது குறித்து ரயில்வே போலீசார் ஆனைமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இறந்த நபர் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சத்யந்திர கோல் (30), என்பதும், இவர் ஆனைமலை திவான்சாபுதூர் பகுதியில் உள்ள தேங்காய் நார் மில்லில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவருடன் பணியாற்றி வந்த சோனு என்கின்ற ஷில்பா (28) என்பவர் சத்யந்திர கோலை தாக்கி ரயில்வே தண்டவாளத்தில் வீசிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மில்லில் இருந்த சோனுவை போலீசார் கைது செய்தனர். 

விசாரணையில் சோனு அங்குள்ள குடியருப்பில் மனைவி சலிதாவுடன் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் கொலை செய்யப்பட்ட சத்யந்திர கோலின் இளைய சகோதரர் பிஜூ, சோனுவின் மனைவியிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவர் பிஜூவை திட்டி அனுப்பியுள்ளார். மேலும் இது குறித்து சோனுவிடமும் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் சோனுவும், சத்யந்திர கோலும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது சத்யந்திர கோலிடம், அவரது சகோதரர் மனைவியிடம் காதலிப்பதாக கூறியதை சோனு கூறியுள்ளார். மேலும் அவரை கண்டித்து வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அப்போது மது போதையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

murder

இதில் ஆத்திரமடைந்த சோனு, சத்யந்திர கோலை கட்டையாலும், கற்களால் தாக்கியுள்ளார். இதில் அவர் சுயநினைவின்றி கிடந்துள்ளார். அவரை சோனு தூக்கிச் சென்று ரயில்வே தண்டவாளத்தில் வீசிச் சென்றார். அதிகாலை 5.30 மணிக்கு வந்த விரைவு ரயில் மோதியதில் அவர் தலை துண்டாகியது தெரியவந்தது. இதையடுத்து சோனுவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.