மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை! கோவையில் அதிர்ச்சி
கோவை செட்டிபாளையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 18 வயது இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கோவை செட்டிபாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்த தொழிலாளியின் இளைய மகள் மனநலம் வளர்ச்சி குன்றிய நிலையில் இருந்துள்ளார். இதனால் தினமும் வேலைக்குச் செல்லும்போது இளைய மகளை, அருகே உள்ள மூத்த மகளின் வீட்டில் விட்டு சென்றுள்ளனர். இதேபோல் நேற்று உறவினர் ஒருவரை மனவளர்ச்சி குன்றிய இளைய மகளை, மூத்த மகள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு, கூறிவிட்டு பெற்றோர்கள் வேலைக்கு சென்றனர். காலை 11 மணி ஆகியும் இளம்பெண் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்தால், அப்பெண்ணின் அக்கா மற்றும் அக்காவின் கணவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கு இளம் பெண் இல்லாதது தெரிய வந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். அப்போது அங்கு விஜயகுமார் என்பவர் புதிய வீட்டின் கட்டிட வேலை நடந்து வந்துள்ளது. அங்கு சென்று விசாரித்த போது, இளம் பெண்ணை அங்கு கட்டிட வேலைக்கு வந்த விஜய் (30) என்பவர் உள்ளே அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அனைவரும் உள்ளே சென்று பார்த்தபோது கட்டிடத் தொழிலாளி விஜய் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லையளித்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்து இளம் பெண்ணை மீட்ட உறவினர்கள், விஜயை பிடித்து செட்டிபாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் தர்ம்புரி மாவட்டத்தை சேர்ந்த விஜய் (30) கோவையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்ததும், மனவளர்ச்சிக்கு ஒன்றிய இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


