காதலியைக் கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் அடைத்த கொடூர காதலன்
காதலியைக் கொன்று, அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்த கடற்படை டெக்னீஷியனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயநகரம் மாவட்டம், ராஜத்தைச் சேர்ந்த சிந்தடா ரவீந்திரா (35), இந்தியக் கடற்படையில் விமானத் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வருகிறார். அவர் கஜுவாக்காவில் உள்ள எல்.பி. நகர் 'கீர்த்தி என்கிளேவ்' அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். ரவீந்திராவுக்குத் ஏற்கனவே திருமணமாகிய நிலையில் விசாகப்பட்டினத்தின் சாளகிராமபுரத்தைச் சேர்ந்த மௌனிகா (29) என்ற இளம் பெண்ணுடன் ரவீந்திராவுக்குத் திருமணத்திற்கு புறம்பான தொடர்பு ஏற்பட்டு இருந்தது. இதனை அறிந்த அவரது மனைவி சண்டையிட்டு கடந்த ஒரு மாதமாக விஜயநகரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்த ரவிந்திரா ஞாயிற்றுக்கிழமை இரவு மௌனிகாவைத் தனது வீட்டிற்கு வரவழைத்தார். அப்போது மெளனிகா பணம் கேட்டு தொல்லை செய்ததால் ஏற்கனவே மனைவி பிரிந்து சென்றதில் மன அழுத்ததில் இருந்த ரவிந்திரா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ரவீந்திரா மெளனிகாவை கொலை செய்தார். கொலைக்குப் பிறகு, உடலை எப்படி அகற்றுவது என்று யோசித்துக்கொண்டிருந்த ரவிந்திரா, மௌனிகாவின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் கவர்களில் வைத்து தனது வீட்டில் உள்ள பிரிட்ஜ்ஜில் (குளிர்சாதனப் பெட்டியில் ) மறைத்து வைத்தார். பின்னர் பதற்றமடைந்த ரவிந்திரா சடலத்தை எவ்வாறு கொண்டு செல்வது எங்கு வீசிவது என ஆலோசித்து மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இரவில் நேராக கஜுவாக்கா காவல் நிலையத்திற்குச் சென்ற ரவீந்திரா அங்கு நடந்த விவரங்களை கூறி சரணடைந்தான்.
இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையின்போது மௌனிகா பணத்திற்காக தன்னைத் துன்புறுத்தியதாலும் மனைவி தன்னை பிரிந்து செல்ல காரணமாக இருந்ததால் மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல் இந்தக் கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். இருப்பினும் குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காகக் கூறப்பட்ட வாக்குமூலமா அல்லது உண்மையான நிதிப் பிரச்சனைகள் இருந்தனவா வேறு எதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தடயவியல் நிபுணர்களும் போலீசாரும் ரவிந்திரா வீட்டில் இருந்து மெளனிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

