கட்டிலில் தூங்கி கொண்டிருந்த லாரி ஒட்டுனர் தலையில் கல்லை போட்டு கொடூர கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம் லட்சியம் கிராமத்தில் தூங்கி கொண்டிருந்த லாரி ஒட்டுனர் மீது கல்லை போட்டு கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள லட்சியம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் பெங்களூரில் லாரி ஓட்டுனராக வேலை செய்து வருகின்றார். ஆறு மாதத்திற்கு ஒருமுறை தனது சொந்த கிராமத்தில் வசிக்கும் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பார்ப்பதற்காக வந்து செல்வார் என கூறப்படுகிறது. இவருக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மூன்றாவது பெண் பிள்ளைக்கு விழுப்புரம் பகுதியில் சேர்ந்த வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் அந்த வாலிபரும் லட்சியம் கிராமத்தில் உள்ள மகேந்திரன் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் தனது சொந்த கிராமமான லட்சியம் கிராமத்திற்கு மகேந்திரன் வந்துள்ளார். இந்த நிலையில் இவரது வீட்டின் அருகே உள்ள ராமர் கோயில் வளாகத்தில் நேற்று இரவு கட்டிலில் படுத்து தூங்கி உள்ளார். இன்று காலை எழுந்து பார்த்த போது அவர் தலையில் யாரோ கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. மகேந்திரன் தலை நசுங்கிய நிலையில் கட்டிலில் சடலமாக இருப்பது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் மற்றும் சின்னசேலம் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மகேந்திரன் தலை நசுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் மூன்றாவது பெண்ணிற்கு நிச்சயிக்கப்பட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த வாலிபரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


