காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு! கோவையில் அதிர்ச்சி
கோவை தொண்டாமுத்தூர் அருகே காதல் முறிவடைந்த ஆத்திரத்தில், இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய மதுபான பாட்டில்களை வீசி தீவைக்க முயன்ற சம்பவமும், கொலை மிரட்டல் விடுத்த விவகாரமும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம், சிபிசி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் தாளியூர் பேரூராட்சியில் பிட்டராக (Fitter) பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள், கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தபோது, சென்னையைச் சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.இதற்கிடையில், கார்த்திக் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 31-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள், நிலுவையில் இருப்பது இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர், கார்த்திக்குடனான தனது காதலை துண்டித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், காதலை ஏற்கக் கோரி கார்த்திக் தொடர்ந்து அந்தப் பெண்ணிற்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கார்த்திக் தனது நண்பர்கள் 3 பேருடன் கேடிஎம் (KTM) மற்றும் பல்சர் ஆகிய இரண்டு இருசக்கர வாகனங்களில் கலிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த பெண்ணின் தந்தை சுந்தரமூர்த்தியிடம் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர், தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பீர் மற்றும் மதுபான பாட்டில்களை வீட்டின் மீது சரமாரியாக வீசினர். அவர்கள் வீசியதில் ஒரு பாட்டில் பலத்த சத்தத்துடன் வெடித்து, வீட்டின் போர்டிகோ பகுதியில் இருந்த செருப்பு ஸ்டாண்ட் மீது விழுந்து தீப்பிடித்தது. இதில் அங்கிருந்த கேன்வாஸ் ஷூக்கள் எரிந்து சாம்பலாகின. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. பாட்டில்களை வீசிவிட்டு அந்த கும்பல் வண்டிகளில் தப்பியோடியது. இச்சம்பவம் குறித்து சுந்தரமூர்த்தி உடனடியாக தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சென்னையைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் உட்பட மொத்தம் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்புப் பகுதியில் நடந்த இந்த துணிகரச் சம்பவம் தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

