கணவரின் சடலம் அருகே மெத்தையில் படுத்துக்கொண்டு ரீல்ஸ் பார்த்து என்ஜாய் செய்த மனைவி
கர்நாடகாவில் கணவரை கொலை செய்து அவரது சடலம் அருகே மெத்தையில் படுத்துக்கொண்டு ரீல்ஸ் பார்த்து என்ஜாய் செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தை சேர்ந்தவர் கிரண் ஹொனன்னவர். இவர் தார்வாடில் உள்ள சிராயு மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராகப் பணிபுரிந்தார். அவர் கர்நாடகாவின் தார்வாடில் உள்ள கர்நாடக பல்கலைக்கழக சாலையில் அமைந்துள்ள ரங்கா ஸ்டெல்லோ அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆறாவது மாடியில், தனது மனைவி பிரியங்கா கட்டனஹள்ளி மற்றும் எட்டு வயது மகனுடன் வசித்து வந்தார். கண் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற 45 வயதான பிரியங்கா, ஒரு எம்.பி.பி.எஸ் பட்டதாரி ஆவார்.
இந்நிலையில் நேற்று பிரியங்கா கணவர் டாக்டர் கிரண் ஹொனன்னவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். அதுமட்டுமின்றி, அவர்களது 8 வயது மகனையும், பலமுறை கத்தியால் குத்தி கொல்லமுயன்றுள்ளார். ரத்தம் சுவற்றில் தெரித்தப்படி இருக்க, இரக்கமே இல்லாமல் துடிக்க விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை பிடித்து கர்நாடக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கணவர் மற்றும் மகனின் சடலங்கள் தனித்தனி அறைகளில் கிடந்தன. கணவரின் சடலத்திற்கு அருகே மெத்தையில் படுத்துக் கொண்டு செல்ஃபோனை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்த மனைவி பிரியங்காவின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்தப்பட்ட அவர்களது 8 வயது மகன், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். புதன்கிழமை முழுவதும் டாக்டர் கிரணின் உறவினர்கள் அவரைத் தொடர்புகொள்ள மீண்டும் மீண்டும் முயன்ற பின்னரே இந்தக் குற்றம் வெளிச்சத்திற்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாங்கள் அவரை அழைத்தபோது, பிரியங்கா தொலைபேசியை எடுத்து, முதலில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாகவும், பின்னர் பணி விஷயமாக வெளியே சென்றிருப்பதாகவும் கூறியதாகக் குடும்ப உறுப்பினர்கள் காவல்துறையிடம் தெரிவித்தனர். மாலை வரை அவரைத் தொடர்பு கொள்ள முடியாததால், குடும்ப உறுப்பினர்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்று, வீட்டில் இருந்த இரத்தக் கறை படிந்த காட்சிகளைக் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. டாக்டர் கிரணின் மனைவி பிரியங்கா அதிர்ச்சியில் இருப்பதாகவும், தற்போது முரண்பாடான மற்றும் அசாதாரணமான தகவலை கூறி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

