“என்ன விட்டுடு, என்ன விட்டுடு”... கரும்பு தோட்டத்தில் அலறிய பள்ளி மாணவி- விவசாயி அதிர்ச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரமேஷ். இவர் நேற்று முன்தினம் மாலை வேளையில், நமச்சிவாயபுரம் கிராம எல்லையில் உள்ள தனது நிலத்தில் மஞ்சள் பயிருக்கு மருந்து அடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென அவரது நிலத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் இருந்து, “என்னை விட்டுடு, என்னை விட்டுடு”.. என்று ஒரு பெண்ணின் அழுகுரல் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, அருகில் சென்று நடந்த சம்பவத்தைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்து போயிருக்கிறார் ரமேஷ்.
அதாவது, பள்ளி சீருடையில் இருந்த மாணவி ஒருவரை பங்காரம் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞன் அழைத்து வந்து, கரும்புத் தோட்டத்தில் வைத்து, பலாத்காரம் செய்ய முயன்றபோது, அவனது ஆசைக்கு இணங்க மறுத்த அந்த மாணவியின் கழுத்தைப் பிடித்து, குரல்வளையை நெரித்து, அவன் கொலை செய்ய முயன்ற சம்பவம்தான் அது.இந்தச் சம்பவத்தை கண்கூடாகப் பார்த்த அந்த விவசாயி, கரும்புத் தோட்டத்தில் இப்படி அத்துமீறிய செயலில் ஈடுபடலாமா என்று தட்டிக்கேட்டதும், அந்த மாணவியை அங்கேயே விட்டுட்டு, தப்பியோடி இருக்கிறான் அந்த இளைஞன். இதனையடுத்து விவசாயி அந்த மாணவிக்கு புத்திமதி சொல்லி, பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை 5:30 மணி அளவில் தனுஷ் மற்றும் அவரது நண்பர்களான முரளி, திருவேங்கடம், ரஜினி உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து, விவசாயி ரமேஷைத் தேடி, கணியாமூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு பைக்குகளில் வந்திருக்கிறார்கள். ரமேஷ் நிலத்திற்கு சென்றிருப்பதாக அவரது குடும்பத்தினர் கூற, அவரைத் தேடி அங்கேயும் சென்றிருக்கிறார்கள் அந்த இளைஞர்கள். அப்போது, நிலத்தில் இருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த விவசாயி ரமேஷைப் பார்த்து, அவரை வழிமறித்து, நாங்க யாரை வேண்டுமானாலும் கூட்டிட்டு போவோம், வருவோம். உங்க பொண்டாட்டி புள்ளைகளையா கூட்டிட்டு போனோமுனு சொல்லி, வாய்க்கு வந்தபடி திட்டி, அடித்து உதைத்து, கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கி இருக்கிறார்கள் அந்த இளைஞர்கள். அப்போது, அருகில் இருந்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடி வந்து, அந்த இளைஞர்களை கொத்தாக மடக்கிப் பிடிக்க முயன்றபோது, தனுஷ் மட்டும் கெத்தாக அங்கேயே நின்றுள்ளான். மற்ற மூவரும் அங்கிருந்து தங்கள் பைக்குகளை எடுத்துக்கொண்டு, வேகமாக தப்பிச் சென்றிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து, போலீசாரை வரவழைத்து தனுஷை அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள்...
கரும்புத் தோட்டத்தில் அத்துமீறலாமா எனத் தட்டிக்கேட்டு, தர்ம அடி வாங்கியதால் படுகாயம் அடைந்த விவசாயி, சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் விவசாயி ரமேஷ், தனுஷை அடிக்க முயன்றபோது, அருகிலிருந்த அவரது நண்பரான முரளி தடுத்ததாகவும், அப்போது தப்பு செஞ்சவனுக்கு துணை நிற்கின்றாயா எனக்கூறி, ரமேஷ் அவரை நெட்டித் தள்ளி விட்டதில், கீழே விழுந்த அவருக்கு கன்னம், கை உள்ளிட்ட சில இடங்களில் காயம் ஏற்பட்டு, அவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்த சின்னசேலம் போலீசார், முதல்கட்டமாக நடந்த இந்தச் சம்பவத்திற்கு மிக முக்கியக் காரணமான தனுஷை கைது செய்து, இன்று கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது, தனுசை நீதிபதி சொந்த ஜாமினில் விடுவித்ததாகக் கூறப்படுகிறது.