மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கணவன்! மகளிர் தினத்தன்று நடந்த கொடுமை

 
murder

அம்பாசமுத்திரத்தில் மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் சிவா, இவருடைய மனைவி இசக்கியம்மாள் (32). இவர்கள் இருவரும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மேலும் இவர்கள் அம்பை பூக்கடை பஜார் பகுதியில் வெவ்வேறு கடைகளில் பூக்கட்டும் வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதிக்கு 9 வயதில் முகுந்தன் என்ற மகனும், 4 வயதில் நிதிஷா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இசக்கியம்மாள் அதே பகுதியில் வசிக்கும் அவருடைய தந்தை வீட்டில் கணவனை பிரிந்து கடந்த சில மாதங்களாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை திடீரென அப்பகுதியில் ஹெல்மெட்ட அணிந்து மறைந்திருந்த சிவா, அவரது மனைவி இசக்கியமாளை திடீரென அரிவாளால் சரமாரியாக சுமார் 7 இடங்களில் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இது குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த அம்பாசமுத்திரம் போலீசார் இசக்கியமாளை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கி கொண்டு சென்று அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து அம்பாசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாவை தேடி வருகின்றனர். மகளிர் தினத்தன்று அரங்கேறியுள்ள இந்த சம்பவம் அம்பாசமுத்திரம் சுற்றுச்சவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.