பாலியல் தொல்லை கொடுத்த கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி

 
உத்தனப்பள்ளி

பாலியல் தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபரை அவரது மனைவியே தீர்த்து கட்டி, கள்ளக்காதலன் உதவியுடன் வேனில் உடலை கொண்டு வந்து எரித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் கடந்த 19.03.2023 அன்று எரிந்த நிலையில், ஆண் பிணம் ஒன்று கிடந்தது. தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார், அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கை பிரிவு 174 (சந்தேக மரணம்) என வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? என விசாரணை நடத்தினர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் எரிந்த நிலையில், பிணமாக கிடந்தது தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 43) என தெரிய வந்தது. ரியல் எஸ்டேட் அதிபரான அவருக்கு, லட்சுமி (36) என்ற மனைவி உள்ளார். இதையடுத்து அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்பதை போல கூறிய, லட்சுமி போலீசாரின் கிடுக்கிபிடி விசாரணையில் தனது கணவரை தானே அடித்து கொலை செய்ததாகவும், தனது கள்ளக்காதலன் சின்னராஜ் உதவியுடன் உடலை சானமாவு காட்டிற்கு கொண்டு சென்று எரித்ததையும் ஒப்புக் கொண்டார். 

இதையடுத்து லட்சுமி, அவரது கள்ளக்காதலன் சின்னராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான லட்சுமி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், “ எனக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் பிரகாசுக்கும் திருமணம் நடந்தது. எனது கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. போதையில் வந்து அடிக்கடி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். கடந்த 18.03.2023 அன்றும் குடித்துவிட்டு என்னிடம் வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார். அப்போது நான் வீட்டில் இருந்த கட்டையால் அவரது தலையில் ஓங்கி அடித்தேன். இதில் அவர் இறந்தார். இதையடுத்து உடலை அங்கிருந்து மறைக்க நான் முடிவு செய்தேன். 

திருமணம் முடிந்த 3 நாளில் மனைவியை எரித்து கொலை செய்த கணவன்! விசாரணையில்  சொன்ன காரணம் - லங்காசிறி நியூஸ்

இதற்காக நான் எனது கள்ளக்காதலன் சின்னராஜூக்கு (38) போன் செய்தேன். சின்னராஜ் பிக்அப் வேன் டிரைவர் ஆவார். அவருடன் எனக்கு பள்ளி பருவம் முதலே காதல் இருந்தது. திருமணத்திற்கு பிறகும், எனக்கு அவருடன் தொடர்பு இருந்தது. நான் போன் செய்து அழைத்ததும் சின்னராஜ் எங்கள் வீட்டிற்கு வந்தார். பின்னர் எனது கணவரின் உடலை அங்கிருந்து எடுத்து பிக்அப் வண்டியில் போட்டு சானமாவு காட்டிற்கு கொண்டு வந்தோம். ஆள் நடமாட்டம் இல்லை என்பதை அறிந்ததும் அங்கு உடலை கொண்டு சென்று தீ வைத்து எரித்து விட்டு வந்துவிட்டோம். உடலை எரித்ததால் போலீசார் எங்களை கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்தோம். ஆனாலும் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கண்டுபிடித்துவிட்டனர்” எனக் கூறியுள்ளார். 

கைதான லட்சுமி, அவரது கள்ளக்காதலன் சின்னராஜ் ஆகியோரிடம் உத்தனப்பள்ளி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலியல் தொல்லை கொடுத்த கணவரை மனைவியே தீர்த்து கட்டியதுடன், கள்ளக்காதலன் உதவியுடன் உடலை கொண்டு வந்து தீ வைத்து எரித்த சம்பவம் உத்தனப்பள்ளி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.