பேஸ்புக் காதல்! உல்லாசத்திற்கு வர மறுத்த மனைவியை அடித்து கொன்ற கணவன்

 
murder

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வீரணாமூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ்- கற்பகம் தம்பதிகளின் மூத்த மகன் சுகுமார்(27). இவர் சென்ட்ரிங் கூலி வேலை செய்து வருகிறார். சுகுமாருக்கும் திண்டிவனம் அடுத்த சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

murder

இதனிடையே சுகுமார் மது போதைக்கு அடிமையாகி சரிவர வேலைக்கு செல்லாத காரணத்தால் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதால் முதல் மனைவி சுப்புலட்சுமி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தன் தாய் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுவிட்டார். இந்நிலையில் சுகுமாருக்கு வேலூர் மாவட்டம் அத்தியூர் அருகே உள்ள கலந்தமேடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி- லதா தம்பதிகளின் மகளான திவ்யா(20) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்து இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு வீராணாமூர் கிராமத்தில் வசித்து வந்தநிலையில், சுகுமார் மது போதையில்  தனது இரண்டாவது காதல் மனைவியான திவ்யாவை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அதற்கு திவ்யா மறுத்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த சுகுமார் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை கொண்டு திவ்யா தலையில் பலமாக அடித்ததில் மயக்கமடைந்த திவ்யா சம்பவ இடத்திலேயே  துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சுகுமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.

சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் செஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு விரைந்த செஞ்சி போலீசார், திவ்யாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுகுமாரையும் விரைந்து கைது செய்தனர்