காதல் கணவரை கீழே தள்ளிவிட்ட மனைவி! மூச்சடைத்து பரிபோன உயிர்
ஈரோட்டில், மது போதையில் தகராறில் ஈடுபட்ட கணவரை மனைவி கீழே தள்ளியதில் கணவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் உண்மை தெரியவந்ததால் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு கீழ திண்டல் பகுதியை சேர்ந்த 21 வயது கட்டுமான தொழிலாளி மதன்குமாரும், அவரது உறவினரான 19 வயது சுஜித்ரா.வும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மணமுடித்து 4 மாதங்களே ஆன நிலையில், அடிக்கடி மதன்குமார் மது போதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். கடந்த 5.ம் தேதி இதே போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தனது தாய் வீட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறு சுஜித்ரா கேட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கழுத்தை பிடித்து நெறித்துள்ளனர். அப்போது சுஜித்ரா தள்ளி விட்டதில் கீழே விழுந்த மதன்குமார் பேச்சு மூச்சின்றி மூர்ச்சையானார். இதனால் பதறிப்போன சுஜித்ரா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதன்குமார் கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நடந்த சம்பவத்தை மறைத்து கணவர் விசம் குடித்து விட்டதாக சுஜித்ரா கூறி உள்ளார்.
இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மதன்குமார் கடந்த 11.ம் தேதி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பின் மதன்குமார் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்குகளும் முடிக்கப்பட்டன. இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், மதன்குமார் கழுத்து நெறிக்கப்பட்டிருப்பதும், பின்தலையில் அடிபட்டதில் மூளையில் ரத்தம் உறைந்திருப்பதும் அவரது மரணத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் அதன் அடிப்படையில் சுஜித்ராவிடம் ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மையை அவர் ஒப்புக்கொண்டார். ஏற்கனவே சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்திருந்த போலீசார் அதனை கொலை வழக்காக மாற்றி சுஜித்ராவை இன்று கைது செய்தனர். இளம் தம்பதியர்கிடையே ஏற்பட்ட மோதலில், எதிர்பாராதவிதமாக கணவன் உயிரிழந்திருப்பதும், இதற்கு காரணமான மனைவியை போலீசார் கைது செய்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


