மனைவியின் சடலத்துடன் 3 நாட்களாக வாழ்ந்த கணவன்... ஒரு மாதத்திற்கு பின் கையும் களவுமாக கைது

 
மனைவியின் சடலத்துடன் 3 நாட்களாக வாழ்ந்த கணவன்... ஒரு மாதத்திற்கு பின் கையும் களவுமாக கைது

பெங்களூருவில் மனைவியை கொடூரமாக கொலை செய்து காலி மனையில் வீசி சென்ற கணவன் ஒரு மாதத்திற்கு பின் கைது செய்யப்பட்டார்.

பெங்களூருவின் எம்.எஸ். நகரில் உள்ள அக்ரஹாரா லேஅவுட்டில் காலி இடத்தில் சிதைந்த நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இறந்தவர் அனுசுயா பெஹாரா என்பதையும் போலீசார் உறுதி செய்தனர். அவரை கொலை செய்த 32 வயதான சாகர் சந்திர ராவத்தை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.  

விசாரணையில், சம்பிகேஹள்ளி அருகே உள்ள தங்களது வாடகை வீட்டில் ஆகஸ்ட் 11 அன்று பணப் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து, தனது 28 வயதான மனைவி அனுசுயா பெஹாராவை சந்திர ராவத்  கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. காவல்துறையின் கூற்றுப்படி,  வாக்குவாதத்தின் போது, ​​அவர் அனுசுயாவின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்று தெரியாமல் 3 நாட்களாக பிணத்துடனே வாழ்ந்த சந்திர ராவத், கொலை செய்த நான்காவது நாள், ஆகஸ்ட் 16 அன்று, அதிகாலை 3 மணியளவில், அனுசுயா பெஹாராவின் உடலை ஒரு கட்டிலில் சுற்றி, தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு காலி இடத்தில் வீசியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அவர் வீட்டைக் காலி செய்துவிட்டு, தான் பணிபுரிந்த ஹோட்டலில் தங்கத் தொடங்கினார் எனக் கூறப்படுகிறது.


அந்த காலி இடத்தின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவர்கள் நிகழ்விடத்திற்கு சென்று சிதைந்த நிலையில் இருந்த அப்பெண்ணை மீட்டனர்.  இறந்தவர் அணிந்திருந்த ஆடைகள், அவரது கழுத்து மற்றும் கைகளில் இருந்த நகை ஆகியவற்றின் மூலம் அந்தப் பெண்ணின் அடையாளத்தை அறிந்து ராவத்தை போலீசார் கைது செய்தனர். அந்தத் தம்பதியினர் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டு, பிழைப்புக்காக பெங்களூருக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.