மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கணவர்!

கோவையில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணம்பாளையம் மதுரை வீரன் கோவில் பகுதியை சேர்ந்த அனிதா (42). இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் குமார். இவர்களுக்கு கார்த்திக் (22) என்ற மகன் உள்ள நிலையில் அனிதா, கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து, சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சின்னதுரை(48) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.
அனிதா தனது கணவரான சின்னதுரையுடன் இணைந்து அடிக்கடி மது குடிப்பதும், அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்படுவதும் வழக்கம். இந்நிலையில் கடந்த 13ம் தேதி இரவு கார்த்திக் வேலைக்கு சென்று விட, வீட்டில் இருந்த அனிதா அதிகளவு மது அருந்தியதாக தெரிகிறது. இதனிடையே இரவில் வெளியே சென்றிருந்த சின்னதுரை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த அனிதா, மதுபோதையில் இருந்த சின்னதுரையை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதில் கோபமடைந்த சின்னதுரை அனிதாவை தாக்கிய நிலையில் மது போதையில் அனிதா திரும்ப தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சின்னதுரை அனிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை வீட்டில் இருந்த அனிதாவின் சேலையால் பேனில் தூக்கில் தொங்கவிட்டுள்ளார். பின்னர் வழக்கம் போல சின்னதுறை தூங்கச் சென்றார். இந்நிலையில் அதிகாலையில் அனிதாவின் தம்பியான முத்து என்பவர் வீட்டிற்கு வந்த போது அனிதா இறந்த நிலையில் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் தனக்கும் தெரியாதது போல் அதிர்ச்சியை வெளிபடுத்திய சின்னதுரை அனிதாவின் உடலை இறக்குமாறு கூற இருவரும் இணைந்து உடலை இறக்கியுள்ளனர். மேலும் உடலை அடக்கம் செய்துவிடலாம் என முடிவு செய்த நிலையில், இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சின்னதுரையிடம் நடத்திய விசாரணையில், அனிதா வயிற்று வலியால் அவதிபட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக கார்த்திக் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கை சந்தேக வழக்காக பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் முகத்தில் தாக்கியிருப்பதும், கழுத்து எலும்புகள் உடைக்கப்பட்டிருப்பதும், மூச்சை திணற செய்து கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அனிதாவின் உறவினர்கள் மற்றும் சின்னதுரையிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், என் மனைவிக்கு எந்த விரோதிகளும் இல்லை, அவர் நல்ல முறையில் தான் இருக்கிறார், எனக்கும் அவருக்கும் எந்த சண்டையும் கிடையாது எனக் கூறியுள்ளார். போலீசார் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என கருதிய சின்னதுரை திடீரென மாயமாகி விட்டார். போலீசார் அவரை தேடி இன்று காலை சிங்காநல்லூரில் பிடித்தனர். அவரிடம் விசாரித்த போது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து சின்னதுரையை கைது செய்துள்ள போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.