காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்
சென்னையை அடுத்த ஆவடியில் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த காதல் கணவன் ஜான்சன் (27) ஆவடி காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி நந்தவன மேட்டூர் பகுதி சேர்ந்தவர் ஜான்சன். இவர் அம்பத்தூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சாரம்மாள் என்ற பெண்ணுக்கும் கடந்த ஐந்து மாதம் முன்பு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.. இவர்கள் ஆவடி ஜீவா நகரில் வசித்து வந்தனர்.
சாரம்மாள் ஏற்கனவே நடந்த முதல் திருமணத்தை மறைத்து ஜான்சனை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற விவரம் தெரிந்துள்ளது. அது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆவடி ஜீவா நகரில் உள்ள வீட்டில் கடந்த 16ஆம் தேதி சாரம்மாளை கழுத்தறுத்து கொலை செய்து கோணியில் அடைத்து வைத்ததாக காவல் நிலையத்தில் சரணடைந்த ஜான்சன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுகுறித்து ஆவடி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.