கர்ப்பப்பை அறுவை சிகிச்சையால் மனைவி இறந்ததாக நாடகமாடிய கணவர்!

 
g

கள்ள உறவை கண்டித்த மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு  கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்தால் இறந்து விட்டதாக நாடக மாடிய கணவர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு அடுத்த தோப்புக்கானா.   இப்பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு.  37 வயதான இந்த வாலிபர் எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகிறார்.   இவரின் மனைவி பானுமதி.  32 வயது. இத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

 சேட்டுவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ள உறவு இருந்து வந்திருக்கிறது.  பானுமதி இதை தட்டி கேட்டிருக்கிறார்.  இதனால் சேட்டுவிற்கும் பானுமதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.  

k

 இந்த நிலையில் கடந்த வாரம் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார் பானுமதி.  அதனால் அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்திருக்கிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவும் கள்ள உறவு தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.  இதில் ஆத்திரமடைந்த சேட்டு மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்.

பின்னர் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக உறவினர்களிடம் நாடகமாடி இருக்கிறார்.  சேட்டு உறவினர்கள் ஆரம்பத்தில் இதை நம்பி இருக்கிறார்கள்.   பானுவின் உடலை புதைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்திருக்கிறார் சேட்டு.

அப்போது அவரின்  நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் பானுமதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் புகார் அளிக்க, ஆற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சேட்டுவை அழைத்து விசாரித்த போது தான் கள்ள உறவை கண்டித்ததால் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.  இதன் பின்னர் அவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.