‘மனைவியின் அழகை வர்ணித்ததால் ஆத்திரம்’- நண்பனின் தலையை அரிவாளால் வெட்டிய கணவர்!
புதுச்சேரியில் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி உழவர்களை பஜனை மடத்து வீதியைச் சேர்ந்தவர் சந்துரு (வயசு 23) தொழிலாளி. இவரும் புதுச்சேரி நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் கோழி லோடுகளை இறக்கி வந்தனர்.இதனால் இருவரும் நண்பர்களாக இருந்தனர். வெங்கடேசனின் மனைவி வம்பாகீப்பாளையத்தை சேர்ந்தவர். அவரிடம் போன் மூலம் சந்துரு அடிக்கடி ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதனை தனது கணவர் வெங்கடேசனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து வெங்கடேசன் சந்துருவை அழைத்து கண்டித்துள்ளார்.
இதன் பிறகும் சந்துரு அடிக்கடி வெங்கடேசன் மனைவிக்கு போன் செய்து அவரது அழகை வர்ணித்து பேசியுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு சந்துருவை மது அருந்த வெங்கடேசன் அழைத்துள்ளார். உப்பளம் மைதானத்திற்கு பின்புறம் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது வெங்கடேசனுடன் அவரது நண்பர்கள் 2 பேர் இருந்துள்ளனர். அவர்கள் சந்துருவை அடித்து உதைத்து அறிவாளால் தலையில் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்துரு அங்கேயே துடிதுடித்து இறந்தார். இரவு நேரம் என்பதால் அங்கு நடந்த கொலை சம்பவம் வெளியில் தெரியவில்லை. இன்று ரத்த வெள்ளத்தில் சந்துரு கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பிறகு சந்துருவின் உடலை கைப்பற்றி ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசன் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


