திடீரென வீட்டுக்குள் நுழைந்து கணவன், மனைவியை வெட்டி சாய்த்த கும்பல்

 
murder

அழைப்பிதழ் கொடுப்பது போல் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்கள் கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் தேனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எண்டப்புளி ஊராட்சிக்கு உட்பட்ட எ.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாய கிருஷ்ணன் (வயது40) பிரியா (வயது37) இன்று மாலை தம்பதியினரின் வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக இரண்டு இளைஞர்கள் மஞ்சள் பையுடன் வந்துள்ளனர். வீட்டிற்குள் சென்ற இளைஞர்கள் திடீரென பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாயகிருஷ்ணனை வெட்டித்தாக்கி உள்ளனர். அதனை தடுக்க வந்த மனைவிக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இந்த நிலையில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த இளைஞர்கள் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர்.

இந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் மாயகிருஷ்ணனுக்கு கை மற்றும் முதுகு உள்ளிட்ட இரண்டு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.தடுக்க வந்த மாயகிருஷ்ணனின் மனைவிக்கும் இரண்டு கைகளில் பலத்த காயம் ஏற்பட்டதோடு வலது கையில் இரண்டு விரல்கள் துண்டாகியது.பலத்த காயமடைந்த கணவன், மனைவி இருவருக்கும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அழைப்பிதழ் கொடுப்பது போல வந்த இளைஞர்கள் இருவர் வீட்டிற்குள் புகுந்து கணவன் மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இளைஞர்களை தேடி வருவதோடு முன்விரோதம் காரணமாக நடைபெற்ற சம்பவமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.