மதுகுடிக்காதே எனக் கூறியதால் ஆத்திரம்- பாட்டியின் தலையை தனியாக அறுத்த பேரன்
தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே பயங்கரம் மூதாட்டியின் தலையை துண்டித்த பேரனின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடத்தை அடுத்துள்ள பெரிய குமாரபாளையம் செட்டிகாரதோட்டத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி மயிலாத்தாள் (80). இவரது மகன் கோவிந்தராஜ் இவரது மகன் விஜயகுமார். பச்சையப்பன் இறந்துவிட்டதால், மயிலாத்தாள் அவரது பேரன் விஜயகுமார் (40) ஆகியோருடன் வசித்து வந்தார். விஜயகுமார் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதும், பின்னர் வீட்டில் இருப்பவர்களிடம் தகராறில் ஈடுபடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இதை அவரது பாட்டி மயிலாத்தாள் கண்டித்தார். மது குடிக்காமல் ஒழுக்கமாக வீட்டிற்கு வருமாறு பலமுறை அறிவுரை கூறினார். ஆனால் பாட்டியின் அறிவுரையை கொஞ்சம் கூட, விஜயகுமார் கேட்க வில்லை.இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக நேற்று மாலை, மயிலாத்தாள் வீட்டில் உள்ள கட்டிலில் படுத்து இருந்தார்.இரவு 7 மணி அளவில் விஜயகுமார் மது போதையில் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது மயிலாத்தாளிடம் செலவுக்கு பணம் தருமாறு, விஜயகுமார் கேட்டார். ஆனால் மயிலாத்தாள் பணம் இல்லை என்று கூறிவிட்டார். மேலும் பேரனை திட்டியதோடு, இது போல் மது குடித்து விட்டு, இங்கு வரக்கூடாது எனவும் அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகுமார் நேராக வீட்டுக்குள் சென்றார். அங்கு இருந்த அரிவாளை எடுத்து வந்து மயிலாத்தாள் தலையை மட்டும் தனியாக அறுத்து துண்டித்தார். இதனால் ரத்த வெள்ளத்தில் மூதாட்டி துடிதுடித்து இறந்தார். பின்னர் விஜயகுமார் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது பற்றிய தகவல் அறிந்ததும் குண்டடம் போலீசார் விரைந்து வந்து, மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலையாளி விஜயகுமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுகுடிக்காதே என்று அறிவுரை கூறிய மூதாட்டியின் கழுத்தை அறுத்து பேரன் கொன்ற சம்பவம் குண்டடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


