நண்பரின் ஒருதலை காதலால் விபரீதம்.. சண்டையில் காதலனின் நண்பர் கொலை

 
Murder

திருச்சி அருகே இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவளர்ச்சோலையை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் லால்குடியை சேர்ந்த கல்லூரி மாணவியிடம்  திருமணம் செய்து கொள்ளலாமா எனக் கேட்டுள்ளார். அது குறித்து அந்தப் பெண் அவருடைய சகோதரரான விக்னேஷிடம் கூறியுள்ளார். இது குறித்து விக்னேஷ் நாகேந்திரனை திட்டியுள்ளார். இருவருக்கும் இடையே இது தொடர்பான பிரச்சனை நிலவி வந்த நிலையில் இன்று நாகேந்திரன் இது குறித்து பேசுவதற்காக திருவளர்சோலையில் வசிக்கும் நெப்போலியன், சங்கர், கதிரவன் கமலேஷ் உள்ளிட்டோரை அழைத்துக் கொண்டு திருவளர்ச்சோலை மேல தெருவில் உள்ள விக்ணேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். 

அப்பொழுது அங்கு திரண்ட அப்பகுதி இளைஞர்கள் நாகேந்திரன் மற்றும் அவருடன் வந்தவர்களிடம்  ஏன் இங்கு வந்துள்ளீர்கள்? என கேட்டுள்ளனர். அப்பொழுது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதமும் அதன் பின் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. அதில் அந்த இளைஞர்கள் தாக்கியதில் நெப்போலியன், ஜீவா நாகேந்திரன் உள்ளிட்டோருக்கு காயம் ஏற்பட்டது. பலத்த காயங்களுடன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் நெப்போலியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாகேந்திரன் உள்ளிட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.