வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.4.5 கோடி அரசுப் பணம் மோசடி- பெண் ஊழியர் கைது

 

திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.4.5 கோடி மோசடி செய்த கணினி பெண் ஆபரேட்டர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள எறையூரை சேர்ந்த சக்கரவர்த்தி மனைவி பத்மினி, பெண்ணாடத்தை சேர்ந்த மணி மனைவி தேவகி. இவர்கள் 2 பேரும் தங்களது கணவர் இறந்துவிட்டதால் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இயற்கை மரணத்திற்கு நிவாரணத்தொகை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், 6 மாதங்களுக்கு மேல் மனு கொடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், இது பற்றி விசாரித்து அவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க கடலூர் கோட்டாட்சியரை விசாரணை அலுவலராக நியமித்து உத்தரவிட்டார். 

அதன்படி கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு அவர்களின் ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்களை பெற்று திட்டக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அலுவலகத்தில் விசாரணை நடத்தி, இணைய தள விவரங்களை ஆய்வு செய்தார். ஆய்வின் போது, கடந்த 4 மாதங்களுக்கு முன்பே அவர்கள் 2 பேருக்கும் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பணம் பெற்றுள்ளதாக தகவல் தெரிய வந்தது. தொடர்ந்து உழவர் பாதுகாப்பு திட்டத்தில் நிவாரண தொகை வழங்கிய பட்டியல், மாவட்ட கருவூல அலுவலகத்தில் பணம் வழங்கப்பட்ட ஆவணங்களை வாங்கி கோட்டாட்சியர் சோதனை செய்தார். அப்போது அவர்கள் 2 பேரின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பவில்லை என்றும், பயனாளிகள் அல்லாத வேறு நபர்களுக்கு பல முறை உழவர் பாதுகாப்பு திட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான காலத்தில் நிவாரணத்தொகை மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. 

மோசடி

இது பற்றி கடலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ரமா கடலூர் மாவட்ட காவல் கண்கானிபரபாளர் ராஜாராமிடம் புகார் அளித்தார். அதில், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.4.5 கோடி மோசடியில் ஈடுபட்ட திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட கணினி ஆபரேட்டர் அகிலா (வயது 30) உள்பட 9 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அந்த புகார் மனுவை பெற்ற காவல் கண்கானிப்பாளர் , மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரை விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்கானிப்பாளர் தேவராஜ் மேற்பார்வையில் ஆய்வாளர் தேவி மற்றும் போலீசார் , கணினி ஆபரேட்டராக பணியாற்றி வந்த திருச்சி மெயின் ரோட்டை சேர்ந்த அகிலா (வயது 30), அவரது கணவர் வினோத்குமார் (30), அகிலாவின் தங்கை கணவர் பாலகிருஷ்ணன் (30), பெரியப்பா மணிவண்ணன் (58), தாய் விஜயா (48), செல்வராஜ், வளர்மதி, முத்துசாமி, விஜயன் ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

தொடர்ந்து அவர்களில் அகிலா, வினோத்குமார், பாலகிருஷ்ணன், மணிவண்ணன், விஜயா ஆகிய 5 பேரை பிடித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கணினி ஆபரேட்டர் அகிலா , உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பயனாளிகள் இல்லாத தனது கணவர் வினோத்குமார் உள்பட 8 பேரின் பல்வேறு வங்கி கணக்கிற்கு ரூ.4 கோடியே 62 லட்சத்து ஆயிரத்து 781 பணத்தை செலுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. தன் குடும்ப உறவினர்களின் பெயர்களில் மோசடியாக பண பரிமாற்றம் செய்து அரசு பணத்தை அபகரித்து கையாடல் செய்து, தெரிந்தே அரசுக்கு இழப்பீடு செய்தது தெரிந்தது. இதையடுத்து பிடிபட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட அகிலா 8 மாத கர்ப்பிணி என்பதால் அவரை போலீசார் , ஜாமீனில் விடுவித்தனர். மற்ற 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கார், 1 சரக்கு வாகனம், 5½ பவுன் நகை, ரூ.68 ஆயிரத்து 500 ரொக்கப்பணம், 4 சொத்து பத்திரங்களின் நகல்கள் ஆகியவற்றை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். 

Tittakudi, Cuddalore : திட்டக்குடி: வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று முதல்  29ம் தேதி வரை ஆன்லைன் ஜமாபந்தி; இணையதளம்: http://gdp.tn.gov.in/jamabandhi |  Public App

மோசடி செய்து பெற்ற பணத்தில் அகிலா குடும்பத்தினர் கார், நகை, சொத்துகள் வாங்கி குவித்துள்ளனர். முதற்கட்டமாக அவர்களிடம் இருந்து 2 கார், 1 சரக்கு வாகனம், 5½ பவுன் நகை, ரூ.68 ஆயிரத்து 500 ரொக்கம், 4 சொத்து பத்திரங்களின் நகல்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஒரு சாதாரண கணினி ஆபரேட்டரால் ரூ.4.5 கோடி மோசடி செய்ய வாய்ப்பில்லை என்றும், இதில் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.