வட மாநில நண்பர்களுக்குள் மீன்குழம்பு சண்டை- ஒருவர் அடித்து கொலை
வட மாநில நண்பர்களுக்குள் ஏற்பட்ட மீன் சண்டையில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே வீராணநல்லூர் கிராமத்தில் மாணிக்க நாச்சியார் அம்மன் கோயில் அருகே தனி நபருக்கு சொந்தமான பேவர் பிளாக் கல் தயாரிக்கும் கம்பெனியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 10 நபர்கள் வேலை செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி, நான்கு பேர் ஊருக்கு சென்ற நிலையில் மீதமுள்ள ஆறு நபர்கள் பணி புரியும் இடத்திற்கு அருகில் உள்ள வீட்டில் தங்கி இருந்தனர்.
நேற்று நள்ளிரவு ஆறு நபர்களும் மீன் மற்றும் கோழி இறைச்சி வாங்கி சமைத்துள்ளனர். இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத்குமார் சஹானி (32 )என்பவருக்கு மீன் இல்லாததால் , அவர்களது நண்பர்களான விவேக்குமார் மற்றும் ஷிவ்குமார்ரிடம் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட து. சற்று நேரத்தில் சமாதானம் ஆகி அனைவரும் உறங்கச் சென்றனர்.
இருந்தும் ஆத்திரம் அடங்காத விவேக்குமார் மற்றும் ஷிவ்குமார் ஆகியோர் , போதையில் உறங்கி கொண்டிருந்த பிரமோத்குமார் சஹானியை இரும்பு ராடால் கொடூரமாக தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காலை முதலே காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் மீனிற்காக ஏற்பட்ட பிரச்சினை தான் கொலைக்கு காரணம் என கூறியதை அடுத்து குற்றவாளி இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் உடல் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.